1397.

     கங்கைகொண் டோன்ஒற்றி யூர்அண்ணல்
          வாமம் கலந்தருள்செய்
     நங்கைஎல் லாஉல குந்தந்த
          நின்னைஅந் நாரணற்குத்
     தங்கைஎன் கோஅன்றித் தாயர்என்
          கோசொல் தழைக்குமலை
     மங்கையங் கோமள மானே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      வடிவுடை மாணிக்கமான அம்பிகையே, மலையரசன் மகளே, இளமையான மான் போன்றவளே, கங்கையாற்றை முடியிற் கொண்டவனும், திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் தலைவனுமாகிய சிவனுடைய இடப்பாகத்திற் கலந்திருந்தருளும் நங்கையாய், எல்லாவுலகங்களையும் தந்த நின்னை, அந்த நாராயணனுக்குத் தங்கை யென்று சொல்வேனா, அல்லது தாய் என்று சொல்வேனா, யாது சொல்வேன் சொல்லுக. எ.று.

      கங்கை - கங்கையாறு. மண்ணகம் ஆற்றாது பாதலம் அடையுமாறு பெருகிப் போந்த கங்கையாற்றைச் சடையில் ஒடுக்கியருளிய திறம் புலப்படக், “கங்கை கொண்டோன்” என்பது தொடராற்றலாற் பெறப்படுகிறது. வாமம் - இடப்பாகம். பல்லுலகும் பல்லுயிரும் படைத்தளித்த தாயாதல் தோன்ற “எல்லா உலகும் தந்த நின்னை” என்று சிறப்பிக்கின்றார். உமாதேவியாய்ச் சிவனை மணந்தபோது, மைத்துனனாய் மகட் கொடை புரிந்த செயல் பற்றி, “நாரணற்குத் தங்கை என்கோ” என்றும், உலகங்களைப் படைத்து அவற்றைக் காக்கும் கடவுளாய் நின்று காத்தற் பொருட்டு நாரணனைத் தோற்றுவித்தமை பற்றி “நாரணற்குத் தாயர் என்கோ சொல்” என்றும் கூறுகின்றார். செல்வச் சிறப்பால் மிகுகின்றமை விளங்கத் “தழைக்கும் மலைமங்கை” என்றும், இளமான் போல் மலையரசன் மகளாய் விளையாடிய இளமைக்கோலம் நினைந்து கூறலுறுவார், “கோமள மானே” என்றும் இசைக்கின்றார்.

      இதனால், மலைமங்கையங் கோமளமானாகிய வடிவுடை மாணிக்கமே நின்னை நாரணற்குத் தங்கை யென்கோ தாய் என்கோ சொல்லுக என வேண்டியவாறாம்.

     (12)