1399. தனையாள் பவரின்றி நிற்கும்
பரமன் தனிஅருளாய்
வினையாள் உயிர்மல நீக்கிமெய்
வீட்டின் விடுத்திடுநீ
எனையாள் அருளொற்றி யூர்வா
ழவன்றன் னிடத்துமொரு
மனையாள் எனநின்ற தென்னே
வடிவுடை மாணிக்கமே.
உரை: தான் பிறரை யாள்வதன்றித் தன்னைப் பிறர் ஆள்வதில்லாத பரமனாகிய சிவனது திருவருளாய், உயிர்கள் வினை செய்தற்கேதுவாகிய மலத்தினின்றும் அவற்றை நீக்கி மெய்ம்மையான் இன்ப வீட்டின்கட் செலுத்துகின்ற நீ, என்னை ஆண்டருள்பவனாய்த் திருவொற்றியூரின்கண் வாழ்பவனாகிய அச் சிவபெருமானுக்கு ஒரு மனைவியென நிற்பது, வடிவுடை மாணிக்கமாகிய அம்மையே, வியப்பாக இருக்கிறது. எ.று.
ஒப்பாரு மிக்காருமில்லாத தனித்தலைவனாதல் விளங்க, “தனையாள்பவரின்றி நிற்கும் பரமன்” என்றும், அவனுடைய அருட்சத்தியாவது பற்றித் “தனி அருளாய்” என்றும், உயிர்களை இயல்பாய்ப் பற்றி நிற்கும் சகசமலத்தைப் போக்குதற்கு மாயாகாரியமாகிய கருவி கரணங்களைத் தந்து வினைசெய்து பக்குவமுறச் செய்து மெய்யின்ப வீடு பெறுவிப்பது அருட்சத்தியின் செயலாதலால் அதனை விதந்து, “வினையாள் உயிர்மலம் நீக்கி மெய்வீட்டின் விடுத்திடும் நீ” என்றும் இயம்புகின்றார். “காலமும் தேசமும் வகுத்துக் கருவியாதி விரிவினையும் கூட்டி உயிர்த்திரளையாட்டும் விழுப்பொருள்” (தாயு. 138) என்பது காண்க. பரமனுக்கு அருட்சத்தியாய் உயிர்கட்குத் தனித்தலைவியாகிய நீ, ஒற்றியூர்ப் பெருமானுக்கு மனைவியாயினை யென்பது வியப்பைத் தருகிற தென்பாராய் “மனையாள் என நின்றது என்னே?” என்று கேட்கின்றார்.
இதன்கண், பரமன் அருளாய் உயிர்களை மெய்வீட்டின் விடுத்திடும் நீ, ஒற்றியூர் வாழ்பவனுக்கு ஒரு மனையாள் என நிற்பது என்னே என்பதாம். (14)
|