14. கானலிடை நீருமொரு கட்டையிற் கள்வனும்
காணுறு கயிற்றி லரவும்
கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
கதித்த பித்தளையி னிடையும்
மானலிற் கண்டுளம் மயங்கல்போற் கற்பனையை
மாயையிற் கண்டு வீணே
மனையென்றும் மகவென்றும் உறவென்றும் நிதியென்றும்
வாழ்வென்றும் மான மென்றும்
ஊனலி னுடம்பென்றும் உயிரென்றும் உளமென்றும்
உள்ளென்றும் வெளியென்றும் வான்
உலகென்றும் அளவறு விகாரமுறநின்ற வெனை
உண்மை யறிவித்த குருவே
தானமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: தான தருமம் மிக்க சென்னையிற் கந்த கோட்டத்தில் உள்ள கோயிலில் எழுந்தருளும் கந்த வேளாகிய பெருமானே, தண்ணிய ஒளியுடைய தூய மணிகளுட் சிறந்த சைவமணியாகிய சண்முகத் தெய்வமாகிய மணியே, கானலில் நீரும், மரக்கட்டையில் கள்வனும், காணப்படும் கயிற்றின்கண் பாம்பும் விளக்கமுடைய இப்பியின்கண் வெள்ளியும், பொன்னை ஒளிரும் பித்தளைக் கண்ணும் ஒப்பாதல் கண்டு திரிபுணர்வு கொண்டு மயங்குவது போல மனம் கற்பித்துக் காட்டும் மாயை மயக்கக் கண்டு மனைவி யெனவும் மகவெனவும் உறவெனவும் நிதி யெனவும் வாழ்வெனவும் மானம் எனவும், ஊன் செறிந்த இனிய உடம்பெனவும், உயிரெனவும் உள்ள மெனவும், உள்ளெனவும் வெளியெனவும் வான் எனவும் மண்ணுல கெனவும் அளவற்ற விகாரப் பாட்டால் தாக்குற நின்ற என்னை உண்மை யுணர்வித்த குருவே, உனக்கு என் வணக்கம், எ. று.
இன்மையுற்று இரப்போர் கூட்டம் வேண்டுவன பெற நிறைதலால், தான தருமம் செய்வோர் மிக்கது சென்னை என்பது பெறப்படுதலால், “தானமிகு சென்னை” என்று சிறப்பிக்கின்றார். கடுவெளியில் வெயிலில் தோன்றும் கானல் நீர்நிலை போலத் தோன்றி மயக்குவ துண்மையின், “கானலிடை நீரும்”, மயங்கிருளில் கிடக்கும் மரக்கட்டை மனிதன் போலத் தோன்றக் கண்டு இம்மனிதன் கள்வன் போலும் எனக் காண்பார் நினைப்பதுண்மையின், “ஒருகட்டையில் கள்வனும்” “கயிறு பாம்பு போலத் தோன்றலால் “கயிற்றில் அரவும்”, மண்ணிற் கிடக்கும் கிளிஞ்சல், வெள்ளித் துண்டு போறலின், “கிளிஞ்சலிடை வெள்ளியும்”, மெருகிட்ட பித்தளை பொன் போலுதலால், “பித்தளையிற் பொன்னும் ஒன்றிற் கொன்று ஒப்பத் தோன்றக் கண்டு உள்ளம் மயங்குவது உலகியலில் நாளும் நிகழ்வது பற்றி, “மானலில் கண்டு உளம் மயங்கல் போல்” என்று கூறுகின்றார். திரிபுக் காட்சிக்கு இவையாவும் காட்டப்படுவன. கானலை நீரெனவும் கட்டையைக் கள்வனெனவும், இவ்வாறே பிறவற்றையும் வேறாகக் கொண்டதற்குக் காரணம் மனத்தின் கற்பனா சக்தி எனவும், அதுவும் மாயையால் உளதாவ தெனவும் தருக்க நூலார் கூறுபவாதலால், “கற்பனையை மாயையில் கண்டு” எனவும் எடுத்துரைக்கின்றார். இதனை அந்நூல்கள் திரிபுக் காட்சி என்றும் விபரீத ஞான மென்றும், விகற்ப வுணர்வு என்றும் விளம்புகின்றன. அளவை நூற் பொருளாகிய இது அனைத்துச் சமயத்தார்க்கும் பொதுவாதலால் வள்ளற் பெருமான் அதனை மேற்கொண்டு உரைக்கின்றார். உருவொத்த மக்களில் சிலரை மனைவி, மகவு, உறவினர் என்பதும், பொருளை நிதியென்பதும், அதனை உடைமையை வாழ்வென்பதும், வாழ்க்கையில் எய்தும் உயர்வு தாழ் வென்ற எண்ணத்தை மானம் என்பதும், ஊன் செறிவால் அழகுடையதை உடம்பென்பதும், அதனையே அன்பால் உயிரென்பதும், உடற்குள் இருந்து இயங்குவதால் உளம் என்பதும், ஓர் இடத்தை உள்ளென்பதும் வெளி யென்பதும், மேலுள்ளதும் உலகாயினும் அதனை வானுலக மென்பதும் மண்ணுலக மென்பதும், பிறவும் ஒன்றைப் பிறிதாகக் கருதும் திரிபுணர்வு என்றற்கு “அளவறு விகாரம்” என்று இயம்புகின்றார். இந்நெறியே பற்றிக் காணப்படும் உலகியற் காட்சி அத்தனையும் திரிபுக் காட்சி என்பர். அத் திரிபுணர்வின்றி உண்மையை உள்ளவாறு கண்டுணர்க என்று அறிவுறுத்தமை புலப்பட “உண்மை அறிவித்த குருவே” என வுரைக்கின்றார். உண்மை யறிவை, “திருவருள் நாட்டம் கருணையிற் பெறலும், யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை; ஓவியப் புலவன் சாயல் பெற எழுதிய சிற்ப விகற்ப மெல்லாம் ஒன்றித் தவிராது தடவினர் தமக்குச் சுவராய்த் தோன்றும் துணிவு போன்றனவே” (கழுமலமும். 10) என்று பட்டினத்தடிகள் உரைப்பது காண்க.
இதனால் கந்த கோட்டத்து முருகப் பெருமான் அருளால் வள்ளற் பெருமான் உண்மை யுணர்வு பெற்ற திறம் கூறியவாறாம். (14)
|