140.

    மாலின் வாழ்க்கையின் மயங்கி நின்பதம்
        மறந்துழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்
    பாலி னீரென நின்னடிக்கணே
        பற்றி வாழ்ந்திடப் பண்ணுவாய் கொலோ
    சேலின் வாட்கணார் தீய மாயையில்
        தியங்கி நின்றிடச் செய்குவாய் கொலோ
    சால நின்னுளம் தாள்எவ் வண்ணமோ
        சாற்றிடாய் திருத்தணிகை நாதனே.

உரை:

     திருத்தணிகைப் பெருமானே, மயக்கம் நிறைந்த மண்ணியல் வாழ்வில் எய்தும் இன்பத்தில் மயங்கி நின்னுடைய திருவடி உயிர்த் துணையாவதை மறந்து வருந்தும் வஞ்ச நெஞ்சுடைய யான் பாலொடு கலந்த நீர் போல நின்னுடைய திருவடி நீழலின்கண் சிவானந்த ஞான வடிவாகி வாழச் செய்வாயோ? சேல்மீன் போன்ற ஒளி பொருந்திய கண்களையுடைய மகளிர் விளைவிக்கும் காம மயக்கத்தில் அறிவு திரிந்து பிறவிச் சூழலிலேயே கிடந்து கெடச் செய்வாயோ? நின் திருவுள்ளம் மிகவும் நினைப்பது எதுவோ? உரைத்தருள்க, எ. று.

     அகலமாகப் பரந்து ஒளி மிக்குத் திகழும் பருவ மகளிர் கண்கள் வடிவால் சேல் மீன் போன்றிருத்தலால், “சேலின் வாட்கணார்” என்று எடுத்துக் கூறுகின்றார். அவரது உடலும் மாயா காரியமாய், வேறு உடலைக் கருவிற் கொண்டு வளர்த்து மாயாகாரிய உலக வாழ்க்கைக் கெனப் பயந்தளிக்கும் கடமை பற்றிக்காண நிற்கும் ஆடவர் உடலிற் பாய்ந்து கண் வழி நுழைந்து காமக் காத லுணர்வை யெழுப்பித் தமது மாயா மயக்கத்துள் ஈர்த்துப் பிணித்துப் பிரிவரிய நிலைமை யுண்டாக்கி மண்ணில் வாழச் செய்வது மகளிர் கண்ணொளியின் இயல்பாதலால், “வாட்கணார் தீய மாயை” என்று இசைக்கின்றார். மாயா மயக்கத்தில் விளையும் இன்பத்திலும் துன்பம் மிகுதியாதல் பற்றித் “தீய மாயை” என்று குறிக்கின்றார். அவர்களின் மாய மயக்கிற் சிக்குவோர், தீதென விலக முடியாமல் அது நல்கும் பிறவிக் கேதுவாகிய வாழ்க்கைச் சூழலிலே நின்றொழியப் பண்ணுவது தெளிந்து, “தியங்கி நின்றிடச் செய்குவாய் கொலோ” என வினவுகின்றார். உய்தி பெறச் சமைந்த உயிர்கட்கு உலகியல் வாழ்வு படைத்தளிப்பது இறைவன் தொழிலாதலால் அவன் பால் முறையிடுவது நேரிதாகலின் “நின்றிடச் செய்குவாய் கொலோ” என்கின்றார். வானும் மலையும் கடலும் பொழில் சூழ்ந்த வயல்களும், பல்வகை யழகுடைய பறவைகளும் விலங்குகளும் மக்களும் இனிய காட்சிகளும் பிறவும் நிறைந்து தோன்றும் உலகியல், மிக்க இன்பம் தந்து இதன்கண் எய்தும் வாழ்வினும் சிறந்த வாழ்வில்லை என்ற கருத்தை யுண்டாக்கி, வாழ்வார்க்கு வாழ்க்கையில் பெருங்காதற் பிரிவரிய உணர்வை நல்கிப் பிணிப்பது அறிந்து இதனை “மாலின் வாழ்க்கையின் மயங்கி” என்றும், இவ்வாழ்வினும் இறைவன் தாணிழல் வாழ்வு பேரின்ப நிலைய மாயினும், சிந்தையில் ஞானக்கண் கொண்டு காண நிற்றலின் அதனை மன மயக்கத்தால் மறந்தேன் என்பாராய், “நின் பதம் மறந்து” என்றும், உலகப் பொருளின் நிலையாமை பயக்கும் துன்பங்களால் இடையீடும் இடையறவும் உற்றுத் துன்புற்றேன் என்பாராய், “உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்” என்றும் கூறுகின்றார். பாலொடு கலந்த நீர் பாலின் வண்ண மெய்திப் பாலாவது போலச் சிவஞானச் சூழலாகிய திருவடி நீழலைச் சார்ந்து சிவஞான வடிவுற்றுச் சிவப் பேறு பெறச் செய்தருளுக என்று வேண்டுவாராய்ப் “பாலின் நீரென நின் திருவடிக் கணே பற்றி வாழ்ந்திடப் பண்ணுவாய் கொலோ” என வுரைக்கின்றார். மண்ணில் வாழுமாறு பிறப்பித்த உனக்கு எனது பக்குவம் தெரியுமாதலால், எனக்கு இனி எய்தக்கூடிய நிலை இன்னதென விளங்க வில்லை; நீதான் உரைத்தருள வேண்டும் என்பார், “சால நின்னுளம் தான் எவ்வண்ணமோ சாற்றிடாய்” என வேண்டுகிறார்.

     இதனால் மயக்கம் செய்யும் உலகில் வாழப் பணித்த நீ முடிவில் எனக்குப் பாலும் நீரும் போலக் கலந்து ஒன்றி யுடனாகும் இன்ப வாழ்வு அளிப்பாயோ, இம்மண்ணுலகில் மகளிர் மயக்கத்திற் கிடக்கும் வாழ்வை யளிப்பாயோ கூறுக என வேண்டுமாறு காணலாம்.

     (10)