1400.

     பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம்
          தாய்க்கெனப் பேசுவர்நீ
     முன்னீன்ற பிள்ளையின் மேலாசை
          யுள்ளவா மொய்யசுரர்
     கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையே ஏவக்
          கொடுத்த தென்னே
     மன்னீன்ற ஒற்றி மயிலே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      ஒற்றியூர் வாழ்கின்ற மயிலே, வடிவுடை மாணிக்கமே! நிலைபெற்ற கடைசியாகப் பெற்ற பிள்ளைமேல் தாய்க்கு அன்பு பெரிதாம் என்று உலகவர் உரைப்பர்; நீ முன்னர்ப் பெற்ற பிள்ளைமேல் ஆசை மிக்கிருக்கின்றாய்; அசுரர்கள் மிகப்பலராய்க் கூடிக் கண்டார்க்கு அச்சமுண்டாமாறு விளைவித்த போர்க்களத்துக்கு, இளம்பிள்ளையாகிய முருகனைச் செல்லவிடுத்தாய்; இஃது ஒரு வியப்புக் காண். எ.று.

     தாய்க்குக் கடைப் பிள்ளை மேலும் தந்தைக்குத் தலைப்பிள்ளை மேலும் அன்பு மிக்கிருக்கும் என்பது உலகவர் கூறும் முதுமொழி. அதனை விதந்து, “பின்னீன்ற பிள்ளையின்மேல் ஆர்வம் தாய்க்கெனப் பேசுவர்” என்று உரைக்கின்றார். சூரவன்மன் முதலியோர் கூடி விளைவித்த போர்க்கு மூத்தபிள்ளையான விநாயகரை விடாது இளைய பிள்ளையான முருகனை விட்டதை நினைந்து, “முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா” என்றும், “மொய்யசுரர் ஈன்ற போர்க்கு இளம்பிள்ளையைக் கொடுத்த தென்னே” என்றும் இயம்புகின்றார். உள்ளவா, உள்ளவாறு கண்டேம் என்பது. பெருங்கூட்டமாய்ப் போந்து பொருதமை விளங்க, “மொய்யசுரர்” என்றும், அச்சம் விளைவிக்கும் கடும்போர் செய்தமை தோன்ற “கொன்னீன்ற போர்” என்றும் கூறுகின்றார். போர்க்குச் செல்கென வேல் கைக்கொடுத்து விடுத்தமையின், “இளம்பிள்ளையைப் போர்க்கு ஏவக் கொடுத்தது” என உரைக்கின்றார். மன்: நிலைபேறு குறித்தது.

     இதன்கண், பின்னீன்ற பிள்ளையின்மேல் தாய்க்கு ஆர்வம் பெரிதென உலகவர் கூறுதற்கு மாறாக, இளம்பிள்ளையைப் போர்க்கு ஏவக் கொடுத்தனை; இஃது என்னே என்பதாம்.

     (15)