1401.

     பையாளும் அல்குல் சுரர்மட
          வார்கள் பலருளும்இச்
     செய்யாளும் வெண்ணிற மெய்யாளும்
          எத்தவம் செய்தனரோ
     கையாளும் நின்னடிக் குற்றேவல்
          செய்யக் கடைக்கணித்தாய்
     மையாளும் கண்ணொற்றி வாழ்வே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      மை தீட்டிய கண்களையுடையளாய்த் திருவொற்றியூரில் வாழ்கின்ற அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, பாம்பின் படம் போலும் அல்குலையுடைய தேவமகளிர் பலருள்ளும், இத் திருமகளும் வெண்ணிறமான மெய்யையுடைய கலைமகளும் எத்தகைய தவம் செய்தார்களோ அறியேம்; கைப்பணி செய்விக்கும் நின்னுடைய திருவடிக் கீழ்க் குற்றேவல் செய்தற்கு வேண்டும் திருவருளைக் கடைக்கணித்தருளி யுள்ளாயாகலான். எ.று.

     பை - பாம்பின் படம். மகளிர் அல்குற்கு பாம்பின் விரிந்த படத்தை உவமம் கூறுவது மரபு. சுரர்மடவார் - தேவமகளிர். செய்யாள் - திருமகள். கலைமகளின் திருமேனி வெண்ணிறமாதல் பற்றி, “வெண்ணிறமெய்யாள்” என்று குறிக்கின்றார். சுரமகளிராயினும் தன்பால் இருந்து தான் ஏவின செய்தற்குரிய சிறப்பும் தகுதியும் உடையாரையே குற்றேவற்கு உரியராகக் கொள்கின்றமை விளங்கக் “குற்றேவல் செய்யக் கடைக் கணித்தாய்” எனக் கூறுகின்றார். மையாளும் கண் - மை தீட்டப்படும் கண்.

     இதன்கண், குற்றேவல் செய்யக் கடைக்கணிக்கப் பெற்றிருத்தலின் செய்யாளும் வெண்மை மெய்யாளும் எத்தவம் செய்தனரோ என்பதாம்.

     (16)