1402. இலையாற்று நீமலர்க் காலால்
பணிக்குங்குற் றேவலெலாம்
தலையால் செயும்பெண்கள் பல்லோரில்
பூமகள் தன்னைத் தள்ளாய்
நிலையால் பெரியநின் தொண்டர்தம்
பக்க நிலாமையினான்
மலையாற் கருளொற்றி வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: மலையரசர்க்கு மகளாய்ப் பிறந்து பிள்ளைக்கலி தீர்த்த திருவொற்றியூரில் வாழும் அம்பிகையான வடிவுடைய மாணிக்கமே, இல்லுக்குரிய அறம் பலவற்றையும் செய்யும் நீ, மலர்போன்ற காலால் இடும் குற்றேவல் எல்லாவற்றையும் தலையாற் செய்யும் மகளிர் பலருள்ளும், பூவில் உறையும் மகளாகிய திருமகளை வெறுத்து விலக்குதலை யொழிக; சரியை முதலிய நிலைகளிற் பெரியராகிய நின் தொண்டர் பக்கல் அவள் நில்லாது நீங்கிவிடுகிறாள் என்ற காரணம் பற்றி. எ.று.
காஞ்சியம்பதியில் இல்வாழ்க்கைக்குரிய அறம் முப்பத்திரண்டும் குறைவறச் செய்தமை நினைந்து “இலையாற்றும் நீ” என இசைக்கின்றார். இல்லிருந்து செய்யப்படும் அறம் இல் எனப்பட்டது. பெரும் பணிகள் காலாற் குறிக்கப்படாமையின், குற்றேவல் வகையை “மலர்க்காலாற் பணிக்கும் குற்றேவல்” என்று கூறுகின்றார். தரப்படும் பணியின் தன்மை நோக்காமல் தடை சிறிதும் இன்றி அன்பும் பணிவும் கொண்டு குறைவறச் செய்வதைக் காலால் இட்டதைத் தலையாற் செய்தல் என்பர். இத்தகைய பணிப்பெண்கள் பலர் நினக்குளராயினும், அவருள் ஒருத்தியெனத் திருமகளைப் புறக்கணித் தொதுக்கலாகாது என்றற்காக, “பல்லோரின் பூமகள் தன்னைத் தள்ளாய்” என்று உரைக்கின்றார். தள்ளற் குரிய குறை திருமகள்பால் உண்டு; அதாவது நற்பண்பும் நற்செயலும் உடையார் பக்கம் நில்லாது பிறர்பாலே சென்று தங்கும் சிறுமை; அந் நல்லோருள்ளும் சிவத்தொண்டு புரியும் செம்மனப் பெருமக்கள்பால் தங்காமல் விரைந்து நீங்குவது மிகுதியாக இருத்தலால், அது பற்றி அவளைத் தள்ளுதல் வேண்டா என விண்ணப்பிக்கின்றார். மலையரசன் மகப் பேறின்றி வருந்தினானாக, அக்குறை தீரும் பொருட்டு அவற்கு மகளாகப் பிறந்த புராணச் செய்தி பற்றி, “மலையாற்கருள் ஒற்றி வாழ்வே” என உரைக்கின்றார்.
இதன்கண், பெரிய நின் தொண்டர் பக்கல் நில்லாமை கண்டு திருமகளை நின் பணி புரியும் மகளிருள் ஒருத்தியாகக் கொள்ளாது விலக்குதலை ஒழிக என்பதாம். (17)
|