1403.

     கலைமக ளோநின் பணியைஅன்
          போடும் கடைப்பிடித்தாள்
     அலைமக ளோஅன் பொடுபிடித்
          தாள்எற் கறைதிகண்டாய்
     தலைமக ளேஅருட் டாயேசெவ்
          வாய்க்கருந் தாழ்குழற்பொன்
     மலைமக ளேஒற்றி வாழ்வே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      ஒற்றியூர்க்கண் வாழும் அம்பிகையாகிய வடிவுடை மாணிக்கமே, எல்லார்க்கும் தலையாய இறைவியே, அருளுருவாகிய அன்னையே, சிவந்த வாயும் கரிதாய்த் தாழ்ந்த கூந்தலுமுடைய பொன்மலை பெற்ற மகளே, கலைமகளென்ற சரசுவதியோ நீ இட்ட பணியை அன்புடன் கடைப்பிடித்து முடித்துத் தருகின்றாள்; அலை மகளாகிய திருமகளும் அன்புடன் உறுதியுடன் செய்கின்றாள்; அடியேனுக்கும் பணியினைச் சொல்வாயாக. எ.று.

     கலைமகள் - சரசுவதிக்கு வழங்கும் பெயர். பணி - இன்னது செய்க எனப் பணித்தல். கடைப்பிடித்தாள் - இட்ட பணியைச் சொல்லிய முறையிற் செய்தாள். அலைமகள் - திருமகள். பிடித்தல் என்றது கடைப் பிடித்தல் மேற்று. தலைமகள் - இறைவி. தலைமைப் பண்பும் தலைமைச் செயலும் உடையவள்.

      இதன்கண், தலைமகளும் மலைமகளுமாகிய தாயே, கலைமகளும் அலைமகளும் நின் பணியைக் கடைப்பிடித்துச் செய்ததுபோல, யானும் செய்வேன்; எனக்கும் அறைதி என்பதாம்.

     (18)