1404.

     பொன்னோடு வாணிஎன் போரிரு
          வோரும் பொருணற்கல்வி
     தன்னோ டருளுந் திறநின்குற்
          றேவலைத் தாங்கிநின்ற
     பின்னோ அலததன் முன்னோ
          தெளிந்திடப் பேசுகநீ
     மன்னோ டெழிலொற்றி யூர்வாழ்
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

     மன்னராகிய சிவபிரானுடன் அழகிய ஒற்றியூரில் எழுந்தருளும் அம்பிகையாகிய வடிவுடை மாணிக்கமே, திருமகள், வாணி எனப்படுவோராகிய இருவரும் தங்களைப் பரவுவோர்க்கு முறையே பொருளும் கல்வியும் அருளும் திறம், நின் குற்றேவலைத் தலைமேற் கொண்டு செய்யத் தலைப்பட்ட பின்போ, அல்லது அதற்கு முன்னோ யாம் தெளியுமாறு நீ சொல்லுக. எ.று.

     திருமகள் பொன்னுக்கும் பிறபொருட்கும் அதிதெய்வம் என்பது பற்றி அவளைப் பொன் என்றும், பொன்னி யென்றும், பொன்மகள் என்றும் கூறுவர். பொன்மகள் பொருளும், கலைமகள் கல்வியும் தருபவர் என அறிக. இவ்விரு தெய்வங்கட்கு இச்செல்வமும் கல்வியும் நல்கும் நலம் நின் குற்றேவல் மகளிரானதால் உண்டாயிருக்க வேண்டும். எனினும், குற்றேவலரான பின்னோ முன்னோ எப்போது என அறிய விரும்புகின்றேன்; உரைத்தருள்க என்பாராய், “தெளிந்திடப் பேசுகநீ” என்று வேண்டுகின்றார்.

     இதன்கண், திருமகள் செல்வமும் கலைமகள் கல்வியும் அருளுதல் தேவியாகிய உனக்குக் குற்றேவல் மகளிராகிய காரணத்தால் வாய்த்திருக்க வேண்டும் என்பதாம்.

     (19)