1405. காமட் டலர்திரு வொற்றிநின்
னாயகன் கந்தைசுற்றி
யேமட் டரையொடு நிற்பது
கண்டும் இரங்கலர்போல்
நீமட்டு மேபட் டுடுக்கின்
றனைஉன்றன் நேயம்என்னோ
மாமட் டலர்குழல் மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: தேன் சொரியும் பூவணிந்த கரிய குழலையுடைய மான் போன்ற அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, சோலைகளில் பூவின் தேன் துளிக்கும் திருவொற்றியூரின்கண் நினக்கு நாயகனான சிவன் கந்தையைச் சுற்றிக்கொண்டு வெற்றரையோடு நிற்பதைக் கண்டும் மனம் இரங்காதவள் போல் நீ மாத்திரம் பட்டாடை உடுக்கின்றாயே, உன்னுடைய அன்பை என்னென்பது. எ.று.
மட்டலர், மாக்குழல் மானே என்று இயைக்க; மாக்குழல் - கரிய கூந்தல். மட்டு - தேன். கா - சோலை. அலர்தல் - துளித்தல்; ஏம் அட்ட அரை - காப்பாக வுடுக்கும் உடையில்லாத அரை. அட்ட அரை, அட்டரையென வந்தது. நேயம் - அன்பு.
இதன்கண், நின் நாயகன் அரையிற் கந்தை சுற்றி வெற்றரையோடு நிற்பது கண்டும் இரக்கமின்றி நீ பட்டாடை யுடுப்பதன் கருத்தென்னை என்பதாம். (20)
|