1406.

     வீற்றார்நின் றன்மணத் தம்மியின்
          மேல்சிறு மெல்லனிச்சம்
     ஆற்றாநின் சிற்றடிப் போதினைத்
          தூக்கிவைத் தாரெனின்மால்
     ஏற்றார் திருவொற்றி யூரார்
          களக்கறுப் பேற்றவரே
     மாற்றா இயல்கொண் மயிலே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      மாறா இயல்கொண்ட மயில் போன்ற அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, தனிச் சிறப்பமைந்த நின் திருமணத்தின்போது அம்மியின்மேல் சிறிய மெல்லிய இதழ்களையுடைய அனிச்சம்பூவும் மென்மைக்கு நிகராகாத சிறிய நின் திருவடிப் போதுகளைத் தூக்கிவைத்தார், திருமாலை விடையாக ஏற்றவரும் திருவொற்றியூரில் இருப்ப வரும் ஆகிய சிவனார், தமது திருக்கழுத்தில் கருப்புக் கறை பொருந்த இசைதற்குரிய எளிமையுடையவராம். எ.று.

     வீறு - தனிச்சிறப்பு. தீ வலம் வருதலும், தீயிற் பொரி சொரிவதும், அம்மி மிதித்தலும் திருமணச் சடங்குகள். பலவகை யுலகங்களையும் படைத்தளித்துத் துடைக்கும் பரமனாகிய சிவபெருமான், தன் அருணீழலில் வாழும் ஏனை மக்கள் போலத் திருமணம் செய்து கொள்வதும், அதன்கண் பலவேறு சடங்குகளைச் செய்வதும் நினைந்து வடலூர் வள்ளல் வியக்கின்றார். திருமணத்தில் அம்மி மிதித்தல் என்ற சடங்கினைச் செய்யுமிடத்து, சிவபெருமான் உமாதேவியின் திருவடியைத் தொட்டுத் தூக்கி அம்மிமேல் வைத்த அருமையை நினைந்து, “அம்மியின் மேல் சிறுமெல்லனிச்சம் ஆற்றா நின் சிற்றடிப் போதினைத் தூக்கி வைத்தார் எனில்” என்று இயம்புகின்றார். திருவடிக்கு அனிச்சம்பூவை ஒப்பாகப் பேசுவதை, “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம்” (1120) என்று குறட்பா கூறுவது காண்க. மால் ஏற்றார் - திருமாலை விடையாக வுடையவர்; பெரிய எருத்தினை ஊர்தியாக வுடையவர் என்று கூறுவதுமாம். களக் கறுப்பு ஏற்றவர் - கழுத்தின்கண் விடமுண்ணத் தோன்றிய கரிய கறையை ஏற்ற எளிமையுடையவர். மயிலின் சாயல் இயலாகக் கருதப்படுதலின், என்றும் மாறாத அதன் சாயலை யுடைமை பற்றி உமாதேவியை, “மாற்றா இயல்கொள் மயிலே” என்று பாராட்டுகின்றார்.

     இதன்கண், எல்லார்க்கும் மேலாய பரமசிவன் மணமகனாகி மணமகளாய் வந்த உமையம்மையின் காலைத் தூக்கி அம்மிமேல் வைத்த எளிமை எடுத்துரைக்கப்படுகிறது.

     (21)