1407. பொருப்புறு நீலியென் பார்நின்னை
மெய்அது போலும்ஒற்றி
விருப்புறு நாயகன் பாம்பா
பரணமும் வெண்தலையும்
நெருப்புறு கையும் கனல்மேனி
யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய்
மருப்புறு கொங்கை மயிலே
வடிவுடை மாணிக்கமே.
உரை: யானையின் கொம்பு போலும் கொங்கைகளையும் மயில் போன்ற சாயலையுமுடைய அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, மலையின்கண் வாழும் நீலி என நின்னை அறிஞர் சிலர் ஓதுகின்றார்கள்; அது மெய்யுரையே போலும்; என்னை யெனின், திருவொற்றியூர்க்கண் விருப்பு மிக்குறையும் நின் நாயகனின், பாம்பாகிய அணியும், வெள்ளிய தலைகள் கோத்த தலைமாலையும், நெருப்பேந்திய கையும், அனல் போன்ற மேனியும் ஆகிய இக்கோலத்தைக் கண்டும் நெஞ்சினில் அஞ்சுதல் கொள்கின்றிலை யாகலின். எ.று.
பொருப்பு - மலை. நீலி - நீல நிறத்தையுடையவள். நீல மேனியும் கண்ணும் உடைய நங்கை ஒருத்தி, அஞ்சா நெஞ்சுடையளாய் ஒழுகினாள் என்பதை நீலகேசி முதலிய புறச்சமயநூல்களும், தேவாரத் திருமுறையும், திருத்தொண்டர் புராணமும் கூறுகின்றன. அது மெய் போலும் என வரும் வாக்கியத்திறுதி மொழியை வடநூலறிஞர் வாக்கியாலங்காரம் என்பர். முடி, தோள், மார்பு ஆகிய இடங்களில் மாலையாகவும், கையில் கங்கணமாகவும், இடையிற் கச்சாகவும் பாம்பை அணிந்து கொள்வது பற்றி, பாம்பாபரணத்தை விதந்து மொழிகின்றார். வெண்டலை, தோலும் தசையும் நரம்பும் பிறவுமின்றி வெறும் எலும்புருவில் இருக்கும் தலையை “வெண்டலை” என்று கூறுகிறார். பாம்பும் வெண்டலையும் கையில் நெருப்பும் கொண்டு நிற்கும் தோற்றம் காண்பார்க்கு அச்சம் தருதலின், “கண்டும் நெஞ்சம் அஞ்சாய்” என வுரைக்கின்றார். சிறப்பும்மை தொக்கது.
இதனால், பாம்பாபரணமும் வெண்டலையும் நெருப்புறு கையும் கண்டும் நெஞ்சம் அஞ்சாயாதலின், நின்னை நீலி என்பாரது கூற்று மெய்போலும் என்பதாம். (22)
|