1408.

     அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின்
          நாயகன் அங்குமிழித்
     தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி
          தன்னில் வைத்தே
     தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச்
          சேர்ந்த நின்போல்
     மனம்பொறுத் தார்எவர் கண்டாய்
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, அன்னத்தை ஊர்தியாகவுடைய பிரமதேவன் புகழும் ஒற்றியூர்க்கண் உறையும் நின்னுடைய நாயகன், அழகிய குமிழி யென்னும் கொங்கையையுடையவளாகிய மாற்றாள் ஒருத்தியைத் தன் சடைமுடியில் நாளும் சுமக்கின்றானாக, அது கண்டும் மனத்தே சிறிதும் வெகுளியின்றி அப் பெருமானைச் சேர்ந்து பிரியாதிருக்கின்ற நின்னைப்போல், மனம் பொறுத்திருக்கின்ற மகளிர் இல்லை, காண். எ.று.

     பிரமன், அன்னத்தை வாகனமாகக் கொண்டவன் என்பது பற்றி, “அனம் பொறுத்தான்” என உரைக்கின்றார். கங்கை நீரின் வடிவினளாதலால், அதன்கண் தோன்றும் குமிழியைக் கொங்கையாக்கி, “அம் குமிழித் தனம் பொறுத்தாள்” என்றும், சிவனுக்கு அவளும் ஒரு மனைவியாதல் பற்றி, “மாற்றாள்” என்றும், மாற்றாளை முடிமேற் கொள்ள ஒருத்தியும் மனம் ஒருப்படாள் என்பது குறித்தே “மாற்றாளைத் தன்முடி தன்னில் வைத்துத் தினம் பொறுத்தாள்” என்றும் இங்கிதம் படப் பாடியருளுகின்றார். மாற்றாள் ஒருத்தியுடன் பேசினான் எனப் பிறர் கூறக் கேட்டாலும் வெகுளி மீதூர்ந்து பிணங்குவர் மகளிர்; நீ அதனைக் கண்டும் பிணக்கமும் வெகுளியுமின்றி இணங்கியிருந்து இன்புறுவது நினது தலையாய தன்மையைக் காட்டுகிற தென்பாராய், “அதுகண்டும் சினமின்றிச் சேர்ந்த நின்போல் மனம் பொறுத்தார் எவர் கண்டாய்” என்று இயம்புகின்றார். எவர் பொறுத்தார் என்பது, ஒருவரும் இலர் என்பது விளங்க நின்றது.

     (23)