1409. ஓருரு வாய்ஒற்றி யூர்அமர்ந்
தார்நின் னுடையவர்பெண்
சீருரு வாகுநின் மாற்றாளை
நீதெளி யாத்திறத்தில்
நீருரு வாக்கிச் சுமந்தார்
அதனை நினைந்திலையே
வாருரு வார்கொங்கை நங்காய்
வடிவுடை மாணிக்கமே.
உரை: கச்சணிந்த கொங்கையை யுடைய வடிவுடை மாணிக்கமே, ஒற்றியூர்க்கண் உறைபவரான சிவன் உன்னோடு ஓர் உருவாய் உன்னைத் தனக்கேயுடையராகியவர்; ஆயினும், பெண்மையின் சீரிய உருவுடையளாகும் கங்கையாகிய நின் மாற்றாளை, நீ தெளியாத நிலையில் நீருருவாக்கித் தலையிற் சடையிற்கொண்டு சுமக்கின்றார்; அதனை நீ சிறிதும் நினைந்தாய் இல்லையே! எ.று.
நின்னைத் தனக்கு மனைவியாக வுடையவர் என்பதை “நின்னுடையவர்” எனச் சுருங்கக் கூறுகின்றார். ஆண்மைக் கூறும் பெண்மைக் கூறும் ஒருங்கமைந்த ஒரு மேனியுடையவர் என்றற்கு “ஓருருவாய் அமர்ந்தார்” என உரைக்கின்றார். “நீலமேனி வாலிழை பாகத்தொருவர்” என்று பாரதம் பாடிய பெருந்தேவனாரும், “பெண்ணமரும் திருமேனியுடையீர்” (நல்) என்று ஞானசம்பந்தரும் கூறுவது காண்க. மாற்றாள் - மற்றொரு மனைவியாகிய கங்கை. இயல்பாகவே அவள் பெண்ணாவள்; அதனை உமாதேவி யறிந்தாற் பிணங்குவள் என்று கருதி நீருருவாக்கிச் சடையிற் கொண்டிருக்கின்றார் என்ற கருத்துத் தோன்ற, “நின் மாற்றாளை நீருருவாக்கி சுமந்தார்” என்றும், நீருருவாக்கியது அவளது பெண்மை வடிவம் உனக்குத் தெரியலாகாதென்றற்கு “நீ தெளியாத் திறத்தில் நீருருவாக்கி” என்றும் பாடுகின்றார். பிணக்கின்றி இனிதிருக்கும் தன்மை நோக்கி, “அதனை நீ நினைந்திலையே” என்று எடுத்துரைக்கின்றார்.
இதன்கண், பெண்ணுருவாகிய கங்கையை உமாதேவி தெளியாத் திறத்தில் நீர் உருவாக்கிச் சுமந்தார்; அதனையவள் நினைந்திலள் என்று கூறியவாறாம். (24)
|