9. இரந்த விண்ணப்பம்
இரந்த விண்ணப்பம் என்பது உள்ள குறைகளை
எடுத்துரைத்து உய்திக் குரிய வழி வகைகளை அருள வேண்டிக்
கொள்வது. உற்ற மனநோக்குக் கழுவாய் நாடுவதும்
விண்ணப்பமாம் என அறிக.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய
விருத்தம்
141. நாளை யேகியே வணங்குது மெனத்தினம்
நாளையே கழிக்கின்றோம்
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ
உயர்திருத் தணிகேசன்
தாளை யுன்னியே வாழ்ந்திலம் உயிருடல்
தணந்திடல் தனை யிந்த
வேளை யென்றறி வுற்றிலம் என்செய்வோம்
விளம்பரும் விடையோமே.
உரை: குழம்பியிருக்கின்ற நெஞ்சே, நாளைக்குச் சென்று வணங்குவோம் என்று நாடோறும் பொழுதைக் கழிக்கின்றோம்; இதனை என்னென்று சொல்லுவது? உயர்வுடைய திருத்தணிகையில் எழுந்தருளும் முருகப் பெருமான் திருவடியை நினைந்து வாழ்வதைக் கைவிட்டுள்ளோம்; இனி, இவ்வுடம்பை விட்டு உயிர் நீங்குவது எந்த நேரம் என்பதை அறியோம்; இனி நாம் என்ன செய்யலாம் என்றால், விடை யொன்றும் சொல்ல மாட்டாமல் இருக்கின்றோம், காண், எ. று.
திருத்தணிகைப் பெருமானாகிய முருகக் கடவுளை நாளைக்குச் சென்று வணங்க வேண்டுமென்று ஒவ்வொரு நாளையும் வீணே போக்குகின்றோம்; இது கூடாது என்பாராய், “நாளை யேகியே வணங்குதும் எனத் தினம் நாளையே கழிக்கின்றாய்; என்னையோ என்னையோ” எனக் கடிந்துரைக்கின்றார். நாளையே கழிக்கின்றோம் என்பது ஏனை உணவு உறக்கங்களை விடுகின்றோமில்லை என்பது போன்ற எண்ணங்கள் எஞ்ச நிற்கிறது. உறைப்பின்றி இளகி யலையும் இயல்புடையதாய் இருப்பது தோன்ற, “ஊளை நெஞ்சமே” என வுரைக்கின்றார். என்னையோ என்னையோ என்ற அடுக்கு நாளைக் கழிக்கும் செய்கையின் குற்ற மிகுதி புலப்பட நிற்கிறது. உயர்வு, தணிகைக்காம் போது உயரத்தையும், முருகப் பெருமானைக் குறிக்கும் போது மாண்பையும் தெரிவிக்குமென அறிக. தணிகை நாதன் திருவடியை நினைந்தும் துதித்தும் வணங்கியும் வாழ்வது கடமையாகவும் அதனைச் செய்யா தொழிந்தோம்; இதனை நீளக் கைவிட்டால் முருகனை வழிபடா தொழிந்த குற்றத்தோடு செத்துப் போவோம்; சாகும் நாள் எப்போது என்று நாம் முன் கூட்டி யறிய முடியாது என்றற்கு’ “உயிர் உடல் தணந்திடல் தனை இந்த வேளை யென்றறிவு உற்றிலம்” எனவும், அதனை நாளைச் சாகலாம் என நீட்டிக்க இயலா தென்பார், “என் செய்வோம்” எனவும், செய்யத் தகுவது யாது என எழும் வினாவுக்கு விடை யொன்றும் கூறுதற் கில்லை யென்பார், “விளம்பரும் விடையோமே” எனவும் இயம்புகின்றார். “இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால், பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்” (கோடிகா) என்றும், “நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யாரறிவார், சாநாளும் வாழ்நாளும்” (சாய்க்காடு) என்றும், “இன்றுளார் நாளை யில்லை யெனும் பொருள், ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்” (திருக்காட்டுப்பள்ளி) என்றும் சான்றோர் கூறுவன நினைவு கூர்க சாநாளை முன்னமே யறியும் நல்லறிவு நமக்கில்லை என்றற்கு, “அறிவு உற்றிலம்” என்கின்றார். காரண காரிய முதலிய கூறுகளைக் கொண்டு பிறவகை வினாக்கட்கு விடை கூறும் அறிவு நம்மிடம் உளதாயினும், சாநாளைக் கணித்து விடை விளம்பும் திறம் கிடையாது என்பது விளங்க, “விளம்பரும் விடையோமே” எனக் கூறுகின்றார்.
இதன்கண் சாநாள் அறியாத குறை யுணர்வை வைத்துக் கொண்டு நாளை நாளை என்று தணிகை முருகனை வணங்கக் காலம் கடத்துவது குற்றம் என்பது தெளிவிப்பது காணலாம். (1)
|