1410.

     சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும்
          நாயகர் தாமகிழ்வு
     கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக்
          காணில் கொதிப்பளென்று
     தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை
          மேல்சிறை செய்தனர்ஒண்
     வார்ந்தே குழைகொள் விழியாய்
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      ஒள்ளிய நீண்ட குழையணிந்த காதளவும் நீண்ட கண்களையுடைய அம்மையாகிய வடிவுடை மாணிக்கமே, ஒற்றியூர்க்கண் உறையும் தலைவராகிய சிவபெருமான் நின்பாற் பிரியாமேனியராயிருந்தும், தமது உள்ளத்தில் விருப்பமுற்றே, அவ்விருப்பத்தை நீயறிந்தால் சினந்து கொதிப்பாய் என்று தெளிந்தே, அக்கங்கையாகிய பெண்ணைச் சிவந்த சடைக்குள் வைத்துச் சிறை செய்திருக்கின்றார்; நீ இதனை அறிந்திலை போலும். எ.று.

     ஓருடம்பாய் இயைந்திருப்பதை “நின்பால் சார்ந்து” என்று குறிக்கின்றார். நாயகர் - தலைவர். பெண்களோடு இணைத்து உரைக்குமிடத்து இச்சொல் “கணவர்” என்ற பொருளிலே வழங்கும். மகிழ்தல், இங்கே விருப்பத்தின் மேற்று. கங்கைபால் தாம் அன்பு மிகக்கொண்டே சடையில் கொண்டார் சிவபெருமான்; அக்கொள்கை உமாதேவிக்கு ஊடலை விளைவிக்கும் என்று நினைந்தே என்பார், “அக்கொள்கையைக் காணின் கொதிப்பள் என்று தேர்ந்தே” என்று தெரிவிக்கின்றார். சென்னிக்கண் மன்னிய கங்கை நீர் வழிந்தோடாவாறு சடையால் அணை செய்தார் என்றும், சென்னியில் தங்குகிற கங்கை புறத்தே யாரும் அறியாதவாறு சடையாகிய சிறைக்குள் வைத்தார் எனவும் இருபொருள்படச் “சடைமேற் சிறை செய்தனர்” என்ற தொடர் அமைந்துளது.

     இதன்கண், சிவன் சடைமேல் கங்கையைக் கொண்ட குறிப்பு அக்கங்கைபால் அவர்க்குள்ள அன்பு மிகுதியென்றும், அதனை யறியின் உமாதேவி சினத்தால் மனம் கொதிப்பள் என்று கருதிச் சடையால் அவளைச் சிறை செய்தார் என்றும் கூறியவாறாம்.

     (25)