1411. நீயே எனது பிழைகுறிப்
பாயெனில் நின்னடிமைப்
பேயென் செயும்வண்ணம் எவ்வண்ண
மோஎனைப் பெற்றளிக்கும்
தாயே கருணைத் தடங்கட
லேஒற்றிச் சார்குமுத
வாயேர் சவுந்தர மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: அம்மையான வடிவுடை மாணிக்கமே, என்னைப் பெற்று ஆதரிக்கும் தாயே, கருணையாகிய பெரிய கடல் போன்றவளே, திருவொற்றியூரில் இருக்கும் குமுதமலர் போன்ற வாயையுடைய அழகிய மான் போன்றவளே, நீயே என்னுடைய பிழைகளைப் பொருளாகக் கருதுவையாயின் நினக்கு அடிமையாகிய பேயனாகிய யான் என்ன செய்வேன். எ.று.
பெரியோரது பெருமைப் பண்பு சிறியரும் அடியரும் செய்யும் செய் பிழைகளைப் பொறுப்பதாகும்; “பொறுப்பரன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே” (நீத்தல் 6) என மாணிக்கவாசகப் பெருமான் உரைத்தருளுகின்றார். திருவடியை யன்றிப் பிறிது யாதும் மனம் கொள்ளாத தன்மை ஈண்டு 'அடிமை' எனப்படுகிறது. அமைதியின்றி அலையும் மனமுடையாரைப் பேயரெனல் மரபு. மனஞ்செலுத்தும் நெறியிற் சென்று பிழை செய்யும் சிறுமை கண்டு பெரியோர் அப்பேயரைப் பொறுக்கின்றார்கள்; “பேயேனதுள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை” (கோத் 12) எனத் திருவாசகம் உரைப்பது கொண்டறிக. இவ்வாற்றால் பேயனாகிய என் பிழையைப் பொறாது வருத்துதல் கூடாதென வேண்டுகின்றார் வடலூர் வள்ளலார். பெறுதலினும் பெற்ற பிள்ளையை வளர்ப்பது பெரிதாதலின், “எனைப் பெற்று அளிக்கும் தாயே” எனப் பரவுகின்றார். குமுதம் எனப் பொதுப்படக் கூறினமையின் செங்குமுதமாம்; குமுதம் - அல்லிப்பூ. சுந்தரம் என்ற வடசொல், சவுந்தரம் எனத் திரிந்தது.
இதன்கண், யான் நினக்கு அடிமையாதலின் யான் செய்யும் பிழைகளைக் குறிக்கொண்டு நோக்குவையேல் யான் செய்வது வேறில்லை; என் சிறுமையை நோக்குக என்று உரைப்பதாம். (26)
|