1412. முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி
யூர்எம் முதல்வர்முகிழ்
ஒப்போ தருமலைப் பெண்ணமு
தேஎன்று வந்துநினை
எப்போதும் சிந்தித் திடர்நீங்கி
வாழ எனக்கருள்வாய்
மைப்போ தனையகண் மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: மை தீட்டப்பெற்ற மலர்போன்ற கண்ணையும் மான்போன்ற விழியையுமுடைய அம்பிகையாகிய வடிவுடை மாணிக்கமே, முக்காலத்திலும் அன்பர்கள் போந்து வாழ்த்தி வணங்கும் திருவொற்றியூரில் உறையும் எங்கள் முதல்வராகிய சிவபெருமான் மனமகிழ்வுறுவிக்கும், ஒப்புக் கூறற் கில்லாதுயர்ந்த அரிய மலையரையன் பெற்ற பெண்ணமுதமே, என்று நாவால் ஓதிக்கொண்டு போந்து, எந்தக் காலத்தும் உன்னைச் சிந்தித்து வணங்கி, இடரின்றி வாழ்தற்கு அருள்புரிவாயாக. எ.று.
அந்திப்போது இரண்டும் நண்பகலும் ஆகப் போது மூன்றாயினவாறு காண்க. “அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி” (ஆரூர்) என்று சுந்தரர் கூறுவது காண்க. நாளும் காலந்தோறும் வந்து வழிபடும் அன்பர்கள் வாழ்த்துவதையே கடனாகக் கொண்டு செய்தலை விதந்து “அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர்” என உரைக்கின்றார். முதல்வர் மகிழ் பெண்ணமுதே என இயையும். “முதலாய முதல்வன்” (அச்சோ) என்று மணிவாசகர் முதலியோர் முதல்வனென மொழிதலால் “முதல்வர்” என மொழிகின்றார். ஒப்பும் உயர்வும் இல்லாமையால் “ஒப்பு ஓதரும் பெண்ணமுது” எனப் புகழ்கின்றார். சிந்திப்பார்க்கு இடர் நீக்குதல் ஒருதலை என்பது உலகறிந்த செய்தியாதல் பற்றி, “சிந்தித்து இடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்” என்றும், சிந்தித்தலும் அம்பிகையின் திருவருளின்றிக் கூடாதென்பதனால் “அருள்வாய்” என்றும் இசைக்கின்றார். மைப்போதனைய கண் என்பதற்குக் 'கரிய குவளை போன்ற கண்' என்றலும் உண்டு.
இதனால், எம் முதல்வர் மகிழ் பெண்ணமுதே என்று எப்போதும் நாங்கள் சிந்தித்து இடர் நீங்கி வாழ அருள்புரிவாய் என வேண்டியவாறாம். (27)
|