1413. மீதலத் தோர்களுள் யார்வணங்
காதவர் மேவுநடுப்
பூதலத் தோர்களுள் யார்புக
ழாதவர் போற்றிநிதம்
பாதலத் தோர்களுள் யார்பணி
யாதவர் பற்றிநின்றாள்
மாதலத் தோங்கொற்றி வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: வடிவுடை மாணிக்கமே! இப் பேருலகத்தே யுள்ளவான திருத்தலங்களுள்ளே ஒன்றாக ஓங்கி நிற்கும் திருவொற்றியூரின்கண் வாழும் அம்பிகையே! மேலுலகத்தோர்களுள் நின்னை வணங்கிப் போற்றாதவர் யார்? விளங்கும் நடுவுலகமான இந்தப் பூதலத்தோர்களுள்ளும், நின்னைப்போற்றி நிதமும் புகழாதவர்கள் யார்? பாதலத் தோர்களுள்ளும் நின் தாள்களையே பற்றிப் பணியாதவர்கள் யார்? இவ்வாறு மூவுலகத்தோரும் பணிந்து போற்றும் நின் திருத்தாள்களை யானும் பணிந்து போற்றுகின்றேன். எ.று.
தலம் - ஈண்டு உலகின் மேற்று. மேலுலகம், மீதலம் எனப்படுகிறது; மேல், நடு, கீழ் எனப் பாகுபடுத் துரைக்கப்படும் உலகு மூன்றையும் துறக்கம், மத்தியம், பாதலம் என்று கூறுவதுண்டு. துறக்கம் மீதலம் எனப்படுவதால், மத்தியிலுள்ள பூவுலகம் 'நடு' என்று வழங்கும். அதனை “மேவு நடுப்பூதலம்” என்று புகல்கின்றார். மீதலத்தோர் - தேவர்கள் பூதலத்தோர் - மக்கள். மக்கள் நாடோறும் அம்பிகையைப் போற்றிப் பரவுகின்றார்கள் என்றற்குப் “போற்றி நிதம் புகழாதவர் யார்” என்று சொல்லுகின்றார். பாதலத்தில் வாழ்பவர்கள் உயர்தல் வேண்டி அம்பிகையின் திருவடியைப் பற்றிக் கொண்டு நன்கு பணிகின்றார்கள் என்பதை “நின்றாள் பற்றிப்பணியாதவர் யார்” என வுரைக்கின்றார்.
இதனால், மூவுலகத்து நன்மக்களும் அம்பிகையின் திருவடி பற்றி நினைந்து மொழிந்து வணங்கி வாழ்கின்றனர் என்பதாம். (28)
|