1414. சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா
வருகெனச் செப்புவள்இந்
நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல்
வேண்டும் நவின்மதியின்
தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி
நாதர்தந் தேவிஅன்பர்
வாய்க்குற்றம் நீக்கும் மயிலே
வடிவுடை மாணிக்கமே.
உரை: விளங்குகின்ற திங்களின்பால் உள்ள நாளும் கலைதேய்த்து குறையும் குற்றம் நீங்குமாறு அருளும் திருவொற்றியூர் நாதருடைய தேவியும், அன்பர்களிடத்துண்டாகும் சொற்குற்றம் பொறுத்தருளும் மயில் போன்றவளுமான வடிவுடை மாணிக்கமே, மகன் செய்த குற்றத்தைப் பொருளாகக் கொள்ளாமல், ஏடா, நீ இங்கே வருக எனச் சொல்லித் தாய் அருள் செய்வள்; அதுபோல நாயினேன் குற்றத்தையும் நீ பொறுத்தருள வேண்டுகிறேன். எ.று.
நவில்மதி - விளக்கம் செய்யும் திங்கள். தேய்க்குற்றம் - நாளும் ஒவ்வொரு கலையாகத் தேயும் குற்றம். இது தக்கன் இட்ட சாபத்தால் விளைந்ததென்று கந்தபுராணச் சந்திர சாபப்படலம் கூறுகிறது. கலை முற்றும் தேய்ந்து இல்லை யென்றாகாதவாறு சிவன் பிறை நிலையில் முடிச் சடையில் அணிந்து ஆதரித்தானாதலின், “மதியின் தேய்க்குற்றம் மாற்றும் நாதர்” எனக் கூறுகின்றார். தேய்க்குற்றம் என்ற விடத்துத் தேய் என்பது தேய்தலாகிய பெயராய் நின்றது. வாய்க்குற்றம் - சொற்குற்றம். சேய்க்குற்றம் - சேயாகிய மகனால் செய்யப்படும் குற்றம். வருகென அருகழைத்து அன்பு செய்து ஆதரிப்பள் என்பதை “வருகெனச் செப்புவள்” என்று சொற்சுருங்கச் சொல்லுகின்றார். நாயினேன் எனத் தம்மைத் தாழ்த்திக் கூறும் வாய்மைபற்றித் தன் குற்றத்தை “இந்நாய்க் குற்றம்” என மொழிகின்றார்.
இதனால், சேய்க்குற்றம் பொறுக்கும் தாய்போல் நீயும் என் குற்றம் பொறுத்து அருள் செய்தல் வேண்டும் என்றவாறாம். (29)
|