1415. செங்கம லாசனன் தேவிபொன்
நாணும் திருமுதலோர்
சங்கம தாமிடற் றோங்குபொன்
நாணும் தலைகுனித்துத்
துங்கமு றாதுளம் நாணத்
திருவொற்றித் தோன்றல்புனை
மங்கல நாணுடை யாளே
வடிவுடை மாணிக்கமே.
உரை: செந்தாமரைக்கண் இருக்கும் பிரமதேவன் தேவியான சரசுவதியின் திருமங்கல நாணும், திருமகள் முதலிய தேவமகளிர் கூட்டத்தின் கழுத்தில் விளங்கும் மங்கலப் பொன்னாணும் தலைதுவண்டு உயர்ச்சியின்றி நாணித் தாழுமாறு, திருவொற்றியூர் தியாகேசப் பெருமான் புனைந்த மங்கல நாண் உடையவள் அம்பிகையான வடிவுடை மாணிக்கம். எ.று.
திருமாலின் உந்தியாகிய செங்கமலத்தில் இருப்பதுபற்றிப் பிரமனைச் “செங்கமலாசனன்” என்று தெரிவிக்கின்றார். தேவி - கலைமகள், திருமுதலோர் சங்கம் - திருமகள் முதலிய தெய்வமகளிர் கூட்டம். பொன்நாண் - பொன்னாற் செய்யப்பட்ட மங்கலநாண். அசுரர் கூட்டம் வன்மையுற்று எழுந்தோறும் தேவர்கள் வாழ்வுக்கு இடையூறு தோன்றியவண்ணமிருத்தலால், அவர்களின் நாண்களுக்கு இடுக்கண் தோன்றித் தலைசாயச் செய்தமை புலப்பட, “தலைகுனித்துத் துங்கமுறாது உளம் நாண” எனச் சொல்லுகின்றார். துங்கம் - உயர்வு. தோன்றல் - ஈண்டுத் திருவொற்றியூர்ச் சிவனைக் குறிக்கின்றது.
இதனால், கலைமகள் திருமகள் முதலிய தெய்வமகளிரின் கழுத்துப் பொன்னாண் தலைகுனித்து நாண மங்கள நாண் அணியப் பெற்றவள் வடிவுடை மாணிக்கம் என்பதாம.் (30)
|