1416.

     சேடா ரியன்மணம் வீசச்
          செயன்மணம் சேர்ந்துபொங்க
     ஏடார் பொழிலொற்றி யூரண்ணல்
          நெஞ்சம் இருந்துவக்க
     வீடா இருளும் முகிலும்பின்
          னிட்டு வெருவவைத்த
     வாடா மலர்க்குழ லாளே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      அம்பிகையான வடிவுடை மாணிக்கம், பெருமை பொருந்திய இயற்கை ஞான மணம் கமழ, பல்வேறு இனிய பூக்களையணிவதால் உளதாய செயற்கை மணம் அதனோடு சேர்ந்து விளங்க, பூக்கள் நிறைந்த சோலைகள் மிக்க திருவொற்றியூர்ப் பெருமானது நெஞ்சம் இவற்றிடையே இருந்து மகிழ்ச்சிகொள்ள, வேறு ஒளிகட்கு விள்ளாத இருளும் மழை முகிலும் தோற்று அஞ்சுமாறு கொண்ட வாடாத பூக்களையுடைய கூந்தலை உடையவள், காண். எ.று.

     வடிவுடை மாணிக்கம் வாடாமலர்க் குழலாள் என இயைக்க. சேடு - பெருமை. சிவஞானத் திருமேனியில் முடிக்கண் இயல்பாக வுளதாகும் மணம் சிவஞான மணம் என்பது பற்றிச் “சேடார் இயல்மணம்” என்று சிறப்பிக்கின்றார். திருநாவுக்கரசர், சிவனும் சிவையும் ஞான மேனியரென்பாராய், “தேனார்ந்துக்க ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண் நம்பன்காண் ஞானத் தொளியானான் காண்” (காளத்தி) என்று உரைப்பது காண்க. தேவி கூந்தற்கு இயல்மணம் உண்மை யறியாமையால் நக்கீரர் வாதுபுரிந்து அல்லலுற்றாரெனத் திருவிளையாடல் கூறுகிறது. ஏடு - ஆகு பெயரால் மலர் மேனின்றது. “ஏடமர் பொழிலணி இன்னம்பர்” (இன்ன) என்று ஞானசம்பந்தர் பாடுவது காண்க. இருவகை மணமும் சிவனுக்கு இன்பம் தந்தன என்பார், “ஒற்றியூர் அண்ணல் நெஞ்சம் இருந்துவக்க” என்று வள்ளலார் உரைக்கின்றார். வீடுதல் - கெடுதல். வடிவுடை யம்மையின் குழல் கருமைகண்டு இருளும் முகிலும் ஒவ்வாமையாற் பிற்பட்டு ஒதுங்கின என்பாராய், “பின்னிட்டு வெருவ வைத்த மலர்க்குழல்” எனப் புகழ்கின்றார். தேவமகளிர் சூடின வாடாமை பற்றி, “வாடாமலர்க் குழல்” என்றார் என அறிக.

     இதனால், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை, இயல்மணமும் செயல்மணமும் சேர்ந்து பொங்க, ஒற்றியூரண்ணல் இருந்து உவக்க, இருளும் மழை முகிலும் பின்னிட்டு வெருவ விளங்கும் குழலையுடையவள் என்பதாம்.

     (31)