1417. புரநோக்கி னால்பொடி தேக்கிய
ஒற்றிப் புனிதர்களக்
கரநோக்கி நல்லமு தாக்கிநிற்
போற்றுங் கருத்தினர்ஆ
தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ்
ஞானத் தனிச்சுகந்தான்
வரநோக்கி ஆள்விழி மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: அசுரருடைய முப்புரத்தை நெற்றிக் கண்ணால் நோக்கிச் சாம்பற் பொடியாகச் செய்தருளிய திருவொற்றியூர் இறைவராகிய புனிதருடைய களத்து விடத்தைக் கண்ணாற் பார்த்து, நல்லமுதமாக மாற்றி, நின்னைப் போற்றும் கருத்துடைய மெய்யன்பர்களின் அகத்தே படியும் அறியாமை யிருளை நீக்கி மெய்ஞ்ஞானம் தந்து, அதனால் எய்தப் படும் சிவபோகம் அவர்கட்கு இனிது வருமாறு அருள் நோக்கம் செய்யும் திருவிழிகளையுடையவள், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை. எ.று.
'நோக்கினால் புரம் பொடிதேக்கிய' என இயைக்க. நோக்கு, ஈண்டு நெற்றிக் கண்; நெற்றிக் கண்ணிற் பிறந்த நீயால் வெந்து முப்புரங்களும் சாம்பற் பொடியாய் நிலத்தில் படிந்தன என்ற குறிப்புத் தோன்றப் “பொடி தேக்கிய” என்றும், இதனால் சிவனது சிவமாந்தன்மை கெடாமை தோன்றப் “புனிதர்” என்றும் உரைக்கின்றார். களக்கரம் - கழுத்திலுள்ள விடம். களம் - கழுத்து. கரம் - விடம். “கரம் போலக் கள்ளநோய் காணுமயல்” (சிறுபஞ்ச. 62). சிவபெருமான் விடத்தையுண்டபோது உமாதேவியார் அருகேயிருந்து அது கழுத்தின் கீழ்ச் செல்லாவாறு தடுத்து விடத்தன்மையையும் போக்கினர் என்று அறிஞர் கூறுவது கொண்டு, “களக்கரம் நோக்கி நல்லமுதாக்கிய அருளினாள் அம்பிகை” என உரைக்கின்றார். அதுவேயன்றி, உண்மையன்பர் உள்ளத்தில் அனாதி மலத்தால் உண்டாகும் இருளை தீக்கி ஞானவருளொளி வழங்குகின்றாள் என்பாராய், “கருத்தினர் ஆதரம் நோக்கி உள்ளிருள் நீக்கி மெய்ஞ்ஞானத் தனிச்சுகம்வர நோக்கி ஆள்கின்றாள்” எனவுமுரைக்கின்றார்.
இதனால், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை புனிதர் களக்கரத்தை நல்லமுதாக்கி, போற்றும் கருத்தினர் உள்ளத்திருள் நீக்கி ஞான சுகம் தருவள் என்பதாம். (32)
|