1418.

     உன்னும் திருவொற்றி யூருடை
          யார்நெஞ் சுவப்பஎழில்
     துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந்
          தழைக்கச் சுகக்கருணை
     என்னும் திருவமு தோயாமல்
          ஊற்றி எமதுளத்தின்
     மன்னும் கடைக்கண் மயிலே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      யாவராலும் தியானிக்கப்படுகின்ற திருவொற்றியூரில் உள்ள தியாகப் பெருமானது மனம் உவக்கும்படி எழுச்சியையுடைய மிக்க உயிர்களாகிய பயிர்கள் தழைத்தல் வேண்டி ஞானவாழ்வு தரும் திருவருளென்னும் அமுதநீரை இடையறாமற் பெய்து, எம்முடைய மனத்தின்கண் வீற்றிருந்து கடைக்கண் செய்தருளும் மயிலாவாள், அம்பிகையான வடிவுடை மாணிக்கம். எ.று.

                உன்னுதல் - தியானித்தல். கணவன் மனம் உவப்பன செய்தல் கற்புடைப் பெண்டிர் அறமாதலின், அதனை மறவாது செய்யும் மாண்பு பற்றி ஒற்றியூர்ப் பரமன் நெஞ்சுவத்தல் ஒருதலை என்பது தோன்ற “ஒற்றியூருடையார் நெஞ்சுவப்ப” என்று இயம்புகின்றார். கேவலத்தில் கண்ணிலாக் குழவியைப் போல் மலவிருளிற் கிடக்கும் உயிர்கள், உடல் கருவி முதலியவற்றோடு கூடிச் சகலாவத்தை எய்திப் பின் திருவருள் நலத்தால் சுத்தநிலை எய்த வேண்டுதலின், அந்நிலை நோக்கி மேல் எழும் இயல்பினவாதலால் உயிர்கள் “எழில் துன்னும் உயிர்ப்பயிர்” என்று கூறப்பட்டன. பயிர் வளர்ப்பவர் தண்ணீர் இடையறவின்றிப் பெய்தல்போல உயிர்கள் சகலத்தில் தழைத்து ஓங்கிச் சிவம் விளைத்துக் கோடற்குத் திருவருள் ஞானம் இடையறாது பெறவேண்டுதல் பற்றி “எல்லாம் தழைக்கச் சுகக்கருணை என்னும் திருவருள் அமுது ஓயாமல் ஊற்றி” என்று இசைக்கின்றார். உயிர்த் தொகை யனைத்தும் முடிவில் சுத்தநிலை வீடு பெறல் வேண்டுமென்பது சைவநூற் றுணிபாதலின் “உயிர்ப் பயிர் எல்லாம் தழைக்க” என உரைக்கின்றார். திருவமுது என்றது, திருவருளாகிய தண்ணீர். “தழங்கருந்தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்துய்யக் கொள்ளாய்” (அடைக்) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. கருவி கரணங்கள் சோர்வுறுமிடத்து உய்யும் நெறி காட்டற்கு உள்ளத்தின்கண் வீற்றிருக்குமாறு புலப்பட, “எமது உளத்தில் மன்னும் மயில்” எனப் பரவுகின்றார். மயிற்றோகையிற் கண்போலும் பொறியுண்மையின் “கண்மயில்” என்று சிறப்பிக்கின்றார் எனக் கொள்க.

     இதனால், அம்பிகையான வடிவுடை மாணிக்கம், ஒற்றியூருடையார் நெஞ்சுவப்ப உயிர்ப் பயிரெல்லாம் தழைக்கக் கருணைத் திருவமுது ஓயாமல் ஊற்றி எமது உள்ளத்தில் மன்னியிருக்கின்றாள் என்பதாம்.

     (33)