1419. வெள்ளம் குளிரும் சடைமுடி
யோன்ஒற்றி வித்தகன்தன்
உள்ளம் குளிரமெய் பூரிப்ப
ஆனந்தம் ஊற்றெடுப்பத்
தெள்ளம் குளிர்இன் அமுதே
அளிக்கும் செவ் வாய்க்குமுத
வள்ளம் குளிர்முத்த மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: கங்கை நீரால் குளிர்ச்சியுறும் சடையை முடியிலே யுடையோனான திருவொற்றியூர்ப் பெருமானுடைய திருவுள்ளம் குளிர்ப்பெய்து மாறும், உடல் பூரிக்கவும், இன்பம் ஊற்றெடுத்துப் பெருகவும், தெளிந்த குளிர்ந்த இனிய அமுதம் அளிக்கும் சிவந்த வாயாகிய குமுத மலர் வள்ளத்தில் தண்ணிய முத்தத்தை நல்கும் மான்போன்றவள், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை. எ.று.
வெள்ளம் - கங்கையாற்று நீர். வித்தகன் - வல்லவன், படைத்தளித்தழிக்க மும்மூர்த்திகளாயின பரமனாதல்பற்றி “வித்தகன்” என்று பாராட்டுகின்றார். ஆனந்தம் - மிக்க இன்பம். தெள்ளமுது, குளிர் அமுது, இன்னமுது என இயையும். தெள்ளம்; அம், அல்வழிக்கண் வந்த சாரியை. தெள்ளம் புனல் (கோவை. 379). அமுதம் அளிக்கும் செவ்வாய் என இயையும். 'வாயாகிய குமுதவள்ளத்து முத்தமுடைய மான்' என இயைக்க. இப்பாட்டு ஆர்வ மொழி யணி.
இதன்கண், ஒற்றி வித்தகன் தன் உள்ளம் குளிரவும் மெய் பூரிப்பவும், ஆனந்தம் ஊற்றெடுப்பவும், அமுதமளிக்கும் செவ்வாயாகிய குமுத வள்ளத்து முத்தமுடைய மான் போன்றவள் வடிவுடை மாணிக்கம் என்பதாம். (34)
|