142. விடய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு
விரைமலர்ப் பதம் போற்றேன்
கடையனாயினே னெவ்வணம் நின் திருக்
கருணைபெற் றுய்வேனே
விடையி லேறிய சிவபரஞ் சுடருளே
விளங்கிய வொளிக் குன்றே
தடையிலாத பேரானந்த வெள்ளமே
தணிகையெம் பெருமானே.
உரை: எருதேறும் சிவபெருமானாகிய பரஞ்சுடருக் குள்ளே திகழும் ஒளி மலையே, கரையே யில்லாத பேரின்பக் கடல் போன்றவனே, தணிகையில் எழுந்தருளும் பெருமானே, பொறி புலன்கள் தரும் பொருட் பயன் நுகர்ந்து வாழும் வாழ்க்கையை விரும்பி நின்னுடைய மணம் கமழும் மலர் போலும் திருவடிகளைப் போற்றாமல் கீழ் மகனாய் விட்டமையால், நின் திருவருளை எவ்வாறு பெற்று உய்தி பெறுவேன்? தெரியவில்லையே! எ. று.
“சுடர் விட்டுளன் எங்கள் சோதி” (பாசுரம்) என ஞானசம்பந்தர் முதலியோர் ஞானக்கண் கொண்டு கண்டு கூறலால், சிவனை, இனிது தெரிவித்தற்கு, “விடையில் ஏறிய சிவ பரஞ்சுடர்” என்றும், அவரது நெற்றி விழியில் வெளிப்பட்டமைபற்றி முருகனைப் “பரஞ்சுடர் உள்ளே விளங்கிய ஒளிக்குன்று” என்றும் கூறுகின்றார். அசைவிலாப் பேரொளியாய் நிற்றலால் “ஒளிக்குன்” றென்று சிறப்பிக்கின்றார். தடை, ஈண்டுக் கரை மேற்று. கரைகட்குள் அடங்கி யோடும் நீர்ப் பெருக்குப் போலாமல் கரையின்றிப் பெருகிப் பரந்து உயிர்த் தொகைகட்கு இன்பம் அருளும் சிறப்பு விளங்கத் “தடையிலாத பேரானந்த வெள்ளமே” என்று புகழ்கின்றார். உயிர்த் திரளை நோக்கித் தங்கு தடையின்றிப் பெருகிப் பாய்வது பற்றி இவ்வாறு கூறினார் எனினும் பொருந்தும். விரும்பிப் போற்றேனாய்க் கடையனாயினேன் என ஏதுவும் பயனுமாய்த் தொடர்தலின் விரும்பினன் போற்றேன் என்பன முற்று வாய்பாட்டில் வந்த எச்சமாயின; முற்றெச்சம் என்பது மரபு. விடய வாழ்க்கை- கண் காது முதலிய பொறி வாயிலாக அறிவன அறிந்தும், கை வாய் முதலிய கருவிகளாற் செய்வன செய்தும் பயன் நுகர்ந்து வாழ்தல். இந்நுகர்ச்சி விரைமலர்ப் பதம் போற்றாமைக்கும், போற்றாமை கடையனாதற்கும் ஏதுவாயின. அருணிழல் அளித்து ஞான மணம் கமழ்ந்து விளங்குதலால், முருகன் திருவடியைத் “திருவிரை மலர்ப் பதம்” எனவும், இதனாற் போற்றிப் பரவுதற்குரிய பெருமை திருவடிக் கிருப்பது தெரிந்தும் போற்றா தொழிந்தது குற்ற மென்பது விளங்கப் புலப்படுத்தி, மிக்க குற்றம் செய்வோர் கடையராவது பற்றி, “மலர்ப்பதம் போற்றேன் கடையனாயினேன்” எனவும் இயம்புகின்றார். கடையநாயினேன் எனப் பாடங் கொண்டு கடைப்பட்ட நாய் போன்றேன் என்று கூறுவது முண்டு. வணங்கி வழிபட்டல்லது பெறலாகாதது அவன் திருவருள் என்பவாகலின், கடையனாயினமையின் யான் பெறுவதும் அதன் பயனாக உய்தி எய்துவதும் எவ்வாறு முடியும் என வருந்துகின்றா ராதலால், “கடையனாயினேன் எவ்வணம் நின் திருக்கருணை பெற்றுய்வேன்” என்று கூறுகின்றார்.
இதனால் விடய நுகர்ச்சியில் தோய்ந்து இறைவன் திருவடியைப் போற்றாத குற்றம் நினைந்து உய்தி பெறும் திற மிழந்தமை கூறித் திருவருளை இரந்து நிற்பது காண்க. (2)
|