1420. மாநந்த மார்வயல் காழிக்
கவுணியர் மாமணிக்கன்
றானந்த இன்னமு தூற்றும்
திருமுலை ஆரணங்கே
காநந்த வோங்கும் எழிலொற்றி
யார்உட் களித்தியலும்
வானந் தருமிடை மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: சோலைகள் வளம் பெற்றோங்கும் அழகிய ஒற்றியூர்க்கண் வாழும் இறைவருடைய உள்ளம் மகிழ்வுற்றிட ஒழுகும் அந்தரமாகிய இடையையுடைய மான்போன்ற அம்பிகையாகிய வடிவுடை மாணிக்கம், பெரிய சங்குகள் மேயும் வயல்கள் சூழ்ந்த சீர்காழியில் வாழும் கவுணிய அந்தணர் குல மாமணியாக விளங்கிய திருஞானசம்பந்தருக்கு அந்நாளில் ஞானவின்ப அமுதருளும் திருமுலைகளையுடைய தெய்வமகளாவள். எ.று.
நந்தம் - வளை; சங்குமாம். நீர்வளமிக்க மருதவயல்களில் சிறுசிறு சங்குகளை யேந்தும் வளைகள் வாழ்வதுண்மையின், “மாநந்தமார் வயல்” என்று கூறுகிறார். கவுணிய கோத்திரத்து வேதியர்களைக் கவுணியர் என்பர். அவர் குடி செய்த தவப்பயனாக ஞானசம்பந்தர் தோன்றியது பற்றி அவரைக் “கவுணியர் மாமணி” என வியந்து புகழ்கின்றார். சிவானந்த ஞான இன்னமுத மென்றற்கு “ஆனந்த இன்னமுது” என்று உரைக்கின்றார். திருமுலைக்கண் ஞானப்பால் ஊறி வந்தமை தோன்ற “ஊற்றும்” என்று குறிக்கின்றார். நந்துதல் - ஆக்கமுறல். வானத்தை அந்தரம் என்பது போல மகளிரின் நுண்ணிடையையும் அந்தரம் என்பது பற்றி “வானம் தரும் இடை” எனக் கூறுகின்றார்.
இதன்கண், ஒற்றியார் உட்களித்தியலும் மானாகிய வடிவுடை மாணிக்கமான அம்பிகை, காழிக் கவுணியர் மாமணிக்கு ஆனந்த இன்னமுதூற்றும் திருமுலை ஆரணங்காவள் என்பதாம். (35)
|