1421. வான்தேட நான்கு மறைதேட
மாலுடன் வாரிசமே
லான்தேட மற்றை அருந்தவர்
தேடஎன் அன்பின்மையால்
யான்தேட என்னுளம் சேர்ஒற்றி
யூர்எம் இருநிதியே
மான்தேடும் வாட்கண் மயிலே
வடிவுடை மாணிக்கமே.
உரை: வானவர் தேடவும், மறைநான்கும் தேடவும், திருமாலுடன் தாமரை மலர்மேல் உள்ளவனான பிரமன் தேடவும், மற்றைய அரிய தவத்தோர்கள் தேடவும், என்பால் அன்பு இல்லாமை கண்டு யான் தேடி நிற்கவும், அடியேனுடைய உள்ளத்தில் சேர்தற் பொருட்டுத் திருவொற்றியூருள் எமக்கு இருநிதியாய் இருப்பவள், மான்போன்ற ஒளி பொருந்திய கண்களையும் மயில்போன்ற சாயலையுமுடைய வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை. எ.று.
வானவர்கட்கு மண்ணகத்தில் திருவொற்றியூரில் கோயில் கொண்டிருப்பது தெரியாமையால் தேடினர் என்றற்குத் “தேட” என்றார். வேத ஞானம் பாசஞானமாய்ப் பரமாய முதற்பொருளைக் காண்டற்கு உதவமாட்டாமை பற்றி “நான்கு மறை தேட” என்பாராயினர். நான் பிரமம் என்ற தற்போதமுற்றுச் சிவத்தைக் காணமுயன்று மாட்டாராயினமையின், “மாலுடன் வாரிச மேலான் தேட” என்றார். வாரிசம் - தாமரை. மேலான் - மேலே இருப்பவன்; பிரமன். செல்வமும் போகமும் பெறுவது அருந்தவர் நோக்கமே யன்றிச் சரியை கிரியை முதலிய நான்கையும் முறையே செய்யாமையின், தேடற்றுன்பமன்றி வேறுபயன் அறிந்திலர்; அதுபற்றியே “மற்றை அருந்தவர்” என்று ஒதுக்கிப் பேசுகின்றார். யான் என்ற பற்றுருவமாய் அன்பின்றி நிற்குமாற்றால் தற்போத உணர்வுக்கு அகப்படாமை விளங்க “என் அன்பின்மையால் யான் தேட” என்றும், அஃது அற்ற வழி என்னை யடைதற்கிடம் உள்ளமாதலால் “என்னுளம் சேர்” என்றும் இசைக்கின்றார். இருநிதி - பெருஞ் செல்வம். அருளும் பொருளுமாகிய இருநிதி என்றுமாம். மான் தேடும் என்றவிடத்துத் தேடுதல் ஒப்புப் பொருட்டு.
இதன்கண், வானும் மறைகளும் மாலும் பிரமனும் அருந்தவரும் யானும் தேட என் உள்ளம் சேர்ந்து இருநிதியாய் இலங்குபவள் வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை என்பதாம். (36)
|