1422. முத்தேவர் விண்ணன் முதல்தேவர்
சித்தர் முனிவர்மற்றை
எத்தே வருநின் அடிநினை
வார்நினைக் கின்றிலர்தாம்
செத்தே பிறக்கும் சிறியர்அன்
றோஒற்றித் தேவர்நற்றா
மத்தேவர் வாம மயிலே
வடிவுடை மாணிக்கமே.
உரை: திருவொற்றியூர்க்கண் உறையும் தேவரும் நல்ல மாலையணிந்த தேவருமாகிய சிவனுடைய இடப்பக்கத்திருக்கும் மயில் போன்ற அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, பிரமன் முதலிய முத்தேவர்களும் இந்திரன் முதலிய வானுலகத் தேவர்களும் சித்தர்களும் முனிவர்களும் மற்றுமுள்ள எத்தகைய தேவர்களும் நின் திருவடியை நினைப் பவராதலால் பிறவா வாழ்வு பெற்ற பெரியராவர்; திருவடியை நினையா தொழிந்தவரே செத்துப் பிறக்கும் சிறியராவார். எ.று.
பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் முத்தேவர் என முன்னர் வைத்து வழிபடப்படுபவர். விண்ணவன், விண்ணன் எனச் சாரியை பெறாது வந்தது. வானுலகத்து கற்பக நாட்டுத் தேவர்கள் இந்திரனைத் தலைவனாகக் கொண்டவர்கள். கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர். உலக பாலர் எனப் பலர் உண்மைபற்றி “மற்றை எத்தேவரும்” எனத் தொகுத்தோதினார். திருவடி நினையாதவர் தாம் செத்துப் பிறக்கும் சிறியர் என்றலின், நினைப்பவர் பிறவாப் பெருவாழ் வெய்திய பெரியராம் என்பது பெறப்படும். நினையாரின் நிலையைச் சொல்லவே நினைப்பவர் பெருமை தானே பெறப்படுவது பற்றி உய்த்துணர வைத்தார். சிறியர் - சிறு தெய்வங்கள்.
இதனால், ஒற்றித்தேவர் வாம மயிலான வடிவுடைய மாணிக்கத்தின் திருவடி நினைக்கின்றிலர் தாம்செத்துப் பிறக்கும் சிறியராவர் என்பதாம். (37)
|