1423.

     திருநாள் நினைத்தொழும் நன்னாள்
          தொழாமல் செலுத்தியநாள்
     கருநாள் எனமறை எல்லாம்
          புகலும் கருத்தறிந்தே
     ஒருநா ளினுநின் றனைமற
          வார்அன்பர் ஒற்றியில்வாழ்
     மருநாண் மலர்க்குழல் மானே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      திருவொற்றியூரில் வாழ்கின்ற மணம் கமழும் புதுப்பூக்கள் கூடிய கூந்தலையுடைய மான் போன்ற அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, நின்னைத் தொழுகின்றநாளே திருநாள்; தொழாமல் வீணே கழித்த நாள் பிறப்புக் கேதுவாகிய நாள் என்று மறைகள் எல்லாம் உரைக்கின்ற கருத்தை யுணர்ந்துதான், அன்பராயினார் ஒரு நாளும் நின்னை மறவாராய் ஒழுகுகின்றார்கள். எ.று.

     மருமலர், நாண்மலர் என இயையும். மரு - நறுமணம். நாட்காலையில் மலர்ந்த புதுப்பூ, நாண்மலர் எனப்படும். நின்னைத் தொழுகின்ற நாள் நன்னாள்; திருநிறைந்த நாள் என்றற்கு, “திருநாள் நினைத்தொழும் நன்னாள்” என்றார். தொழாத நாள் வீணே கழிந்த நாள் என்று மதித்த வள்ளலார், வீணாய காலத்துச் செய்தன யாவும் பிறப்புக் கேதுவாதலை யெண்ணித் “தொழாமற் செலுத்திய நாள் கருநாள்” என்ற மறைநூற் கருத்தை நினைவுகூர்ந்து, “மறையெல்லாம் புகலும்” என உரைக்கின்றார். சைவத் திருமுறை. “இட்டன் நும்மடி ஏத்துவார் இகழ்ந்திட்டநாள் மறந்திட்டநாள் கெட்டநாள் இவை என்றலால் கருதேன்” எனவும், “ஓவுநாள் உணர்வழியுநாள் உயிர் போகுநாள் உயர் பாடைமேல் கரவுநாள் இவை என்றலால் கருதேன்” (சுந். பாண்டி) என்பது எண்ணியே, “மறையெலாம் புகலும் கருத்தறிந்தே ஒரு நாளினும் நின்றனை மறவார் அன்பர்” எனக் கூறுகின்றார். மறை யென்றது திருமுறையை; வடமொழியிலுள்ள நான்மறையையன்று; அவை தோன்றிய காலத்தில் சிவவழிபாடு வைதிகரிடையே கிடையாது என வேதநூல் ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றார்கள். ஒரு நாளிலும் மறத்தல் இலர் என்பதை “மறவார்” என மொழிகின்றார். கோயில் இல்லாத ஊர்களைத் “திருவில் ஊர்கள்” என்று பெரியோர் கூறும் மரபை யொட்டியே, தொழும் நாளைத் “திருநாள்” என்று பெரியோர் உரைக்கின்றனர்.

     இதன்கண், தொழும் நன்னாள் என்றும், தொழாமற் செலுத்திய நாள் கருநாள் என்றும் மறைகள் ஓதும் கருத்தறிந்தே அன்பர் பலரும் வடிவுடை மாணிக்கத்தை நாளும் தொழுகின்றார்கள் என்பதாம்.

     (38)