1424. வாணாள் அடைவர் வறுமை
யுறார்நன் மனைமக்கள்பொன்
பூணாள் இடம்புகழ் போதம்
பெறுவர்பின் புன்மைஒன்றும்
காணார்நின் நாமம் கருதுகின்
றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
மாணார்வம் உற்ற மயிலே
வடிவுடை மாணிக்கமே.
உரை: திருவொற்றியூரில் கண்ணுதற் கடவுளின்பால் பேரார்வமுடைய மயில்போலும் அம்பிகையாகிய வடிவுடை மாணிக்கமே, நின்னுடைய திருநாமத்தை மறவாது எண்ணுபவர், நீடிய வாழ்நாள் பெறுவர்; வறுமைத் துன்பம் எய்தார்; நல்ல மனைவியும் மக்களும் பொன்னும் பூணாரமும் ஏவலாளும் மனைவயல்களும் புகழும் ஞானமும் பெறுவர்; பின்பு கீழ்மையொன்றும் எய்தார். எ.று.
நீடு வாழ்தற்குரிய நாட்களைப் பெறுவர் என்றற்கு “வாணாள் அடைவர்” எனச் சுருங்கக் கூறுகின்றார். நோயற்ற வாழ்வும் குறையற்ற செல்வமும் பெறுவர் என்பதை மிகச்சுருக்கமாக “வறுமையுறார்” என மொழிகின்றார். மக்களொடு சார்ந்து வருதலின், நன்மனை, மனைவி மேற்றாயிற்று. ஆள் - ஏவலாள். சங்ககாலச் சான்றோர், ஏவல் இளையர் என்றும், இளையர் எனவும் கூறுவர். நன்மக்கட் பேறுபோல இளையரைப் பெறுதலும் அரியதொன்றென அறிக. “மக்களும் நிரம்பினர், யான் கண்டனையர் என் இளையர்” (புறம்) எனப் பிசிராந்தையார் உரைப்பது காண்க. இடம் - வீடும் தோட்டமும் நன்செய் புன்செய்களும். நீடிய வாழ்வும் செல்வ மிகுதியும் எய்தினோர் நாளடைவில் குணம் மாறி அல்லன செய்து புன்மை யுறுவதுண்மையின், “புன்மை யொன்றும் காணார்” எனக் கூறுகின்றார். திருநாமத்தை எப்போதும் நினைந்த வண்ணம் இருப்பதால், வடிவுடை மாணிக்கத்தின் திருவருள் விளக்கம் முக்குணத்தால் முறை திறம்பாத நன்னிலையை எய்துவித்துப் பாதுகாக்கும் என்ற உறுதிப்பாடு பற்றி, “நின்னாமம் கருதுகின்றோர்” என இசைக்கின்றார். கருதுதல் - மனத்தின்கண் நினைந்தவண்ணம் இருத்தல். மாணார்வம் - மிக்க ஆர்வம்; “மலையினும் மாணப் பெரிது” (குறள்) என்பது போல.
இதன்கண், அம்பிகையின் திருநாமத்தை நினைந்தோதுபவர் வாழ்நாள் முதல் போதம் ஈறாக நலம் பல பெறுவர், புன்மை யொன்றும் காணார் என்பதாம். (39)
|