1425. சீரறி வாய்த்திரு வொற்றிப்
பரம சிவத்தைநினைப்
போரறி வாய்அவ் அறிவாம்
வெளிக்கப் புறத்துநின்றாய்
யாரறி வார்நின்னை நாயேன்
அறிவ தழகுடைத்தே
வாரெறி பூண்முலை மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: கச்சும் பூணாரமும் அணிந்த கொங்கைகளையுடைய மான் போன்ற அம்பிகையாகிய வடிவுடை மாணிக்கமே, சிறப்புடைய அறிவு கொண்டு திருவொற்றியூர்ப் பரமசிவத்தை நினைப்பவர் அறிவாயும், அவ்வறி வெல்லையாகிய வெளிக்கு அப்புறத்தும் நிற்கின்றாயாதலால் உன்னை உண்மைநிலையில் அறிபவர் யாவர் உளர்? நின்னை நாயேனாகிய எளியேன் அறிவதென்பது அழகுடையதாக வுளது. எ.று.
வார் - கொங்கைகட்கணியும் கச்சு. பூண் - மார்பிலணியும் பொன் முத்து முதலிய மாலைகள். சீ்ரறிவு - கல்வி கேள்விகளினாலாகிய அறிவுடன் திகழும் உண்மை யறிவு. அந்த அறிவுக்கண் கொண்டு காண்பது தெளிவுக் காட்சியாதலால், அதனால் சிவத்தைக் காண்பது முறை யென்றற்குத் “திருவொற்றிப் பரமசிவத்தைச் சீரறிவாய் நினைப்போர்” என்று இயம்புகின்றார். அறிவு நினைவுக்குத் திண்மையும் இனிமையும் நல்குவதென்க. நினைக்குங்கால் நினைவினுட் கலந்து நிற்கும் உண்மையறிவினுள் அறிவாய் இயலுதல் பற்றி “நினைப்போர் அறிவாய்” என்றும், அவ்வறிவு பரவி நிற்குமிடம் அறிவெளி யெனவும் சிதாகாசம் எனவும் கூறப்படுதலின் அதனை “அவ்வறிவாம் வெளிக்கு அப்புறத்தும் நின்றாய்” என்றும் கூறுகின்றார். “அறிவினுள் அருளால் மன்னிச் செறிவொழியாது நிற்கும் சிவன்” என்று சிவஞான சித்தியார் தெரிவிப்பது காண்க. அறிவெல்லைக்கு அகத்ததாயின் காண்பதுபோல் புறத்ததாகுமிடத்துக் காணப்படாமை பற்றி “யார் அறிவார் நின்னை” என்றும், நாயேன் அறிவால் அறிந்து உரைப்பதென்பது அத்துணை அழகுபடா தென்பாராய் “நாயேன் அறிவது அழகுடைத்தே” என்றும் இசைக்கின்றார்.
இதனால், அம்பிகையான வடிவுடை மாணிக்கம் அறிவோர் அறிவாயும் அறிவுக் கப்புறத்ததாயும் நிற்பவளென்றும், அறிவிறந்த எல்லையிலுள்ள அப்பெருமாட்டியை அவள் அருள்கொண்டு காட்டக் காண்டல் கூடுமேயன்றி நாம் காண்பது அரிது என்றும், அவளை அறிய முயலும் செயல் அழகு தருவதென்றும் உரைத்தவாறாம். (40)
|