1426.

     போற்றிடு வோர்தம் பிழைஆ
          யிரமும் பொறுத்தருள்செய்
     வீற்றொளிர் ஞான விளக்கே
          மரகத மென்கரும்பே
     ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்
          இடத்தில் இலங்கும்உயர்
     மாற்றொளி ரும்பசும் பொன்னே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      தனிச்சிறப்புடன் ஒளிரும் சிவஞான விளக்கமே, பச்சை நிறம் படைத்த மெல்லிய கரும்பு போல்பவளே, ஏற்றினை யூர்தியும் கொடியுமாகக் கொண்ட திருவொற்றியூரிடத்தே எழுந்தருளும் பெருமான் இடப்பாகத்தில் விளங்கும் உயர்ந்த மாற்றின் பொன்னாமாறு ஒளிசெய்யும் பசும்பொன்னாகிய வடிவுடை மாணிக்கமே, நின்னைப் போற்றிடுவோர் தம்மையறியாமலே பிழைகள் பல செய்வாராயின், அவையனைத்தையும் பொறுத்து அருளுவாயாக. எ.று.

     இணையற்ற ஞானவொளி செய்வதாகலின், “வீற்றொளிர் ஞான விளக்கே” என்றும், நிறத்தால் மரகதத்தையும் அருள்நலத்தால் மென் கரும்பையும் நிகர்த்தல் பற்றி, “மரகத மென்கரும்பு” என்றும் சிறப்பிக்கின்றார். “ஏற்றொளிர் ஒற்றியிடத்தார்” என்பது, ஏற்றுக்கொடி யுயர்த்தி யொளிர்பவர் என்றும், ஏற்றினை யூர்ந்து ஒளிர்பவர் என்றும் பொருள் கொள்ள நிற்கிறது. பொன்னுக்கு மாற்றுக் கூறுவது ஓரளவாய் உருவாய் இருப்பது கொண்டாகும்; அம்பிகையாகிய பசும்பொன் அளவும் உருவும் கடந்து உயர்ந்த வண்ணம் இருப்பதால் “உயர்மாற்றொளிரும் பசும் பொன்” எனப் பகர்கின்றார். போற்றுதல் செய்யும் தொண்டர் முக்குணவயத்தால் பிழைபல செய்யும் இயல்பினராதல் பற்றி அவர் பிழை நோக்கிப் பொறுத்தலே வேண்டுவதென்பாராய், “பிழையாயிரமும் பொறுத்து அருள்செய்” என்று வேண்டுகின்றார்.

     இதனால், ஞானவிளக்கே, மரகத மென்கரும்பே, பசும் பொன்னே, வடிவுடை மாணிக்கமே, பிழை யாயிரமும் பொறுத்து அருள் செய்க என்பதாம்.

     (41)