1427. ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி
தேவர்கள் யாரும்நின்தாள்
பூசையுள் ளார்எனில் எங்கே
உலகர்செய் பூசைகொள்வார்
தேசையுள் ளார்ஒற்றி யூருடை
யார்இடஞ் சேர்மயிலே
மாசையுள் ளார்புகழ் மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: தமக்கென ஒளியும் பெருமையும் நாடாதவரும் திருவொற்றியூரில் உள்ளவருமான சிவனுடைய இடப்பக்கத்தே சேர்ந்துள்ள மயில் போன்றவளே, எத்தகைய குற்றத்தையும் நினையாத சான்றோர் புகழும் மான்போன்றவளான வடிவுடை மாணிக்கம் என்ற அம்பிகையே, திசை காவலாய் உள்ளவர்களும், பிரமன் திருமால் முதலான தேவர்களும் பிற தேவர்கள் யாவரும் நின் திருவடிக்கண் பூசை செய்வதை உள்ளத்தே கொள்ளாராயின், அவர்கள் உலகினர் செய்யும் பூசனையை எங்ஙனம் கொள்வார்கள்? இல்லை யன்றோ. எ.று.
ஆசை - திசை. திசைக்கண் நின்று காக்கும் தேவர்களைத் திக்குப் பாலகர் என்றும், இந்திரன் முதலாக எண்மர் என்றும் கூறுவர். மண்ணுலகத்து மக்கள் இத் தேவர்களை நோக்கித் தாம் செய்யும் நைமித்திகங்களிலும் யாக கன்மங்களிலும் பூசை செய்வது மரபு. ஆயினும் அப்பூசைகள் “பிரதான தேவதைகளின் மூலமாக” அவர்களை அடைகின்றன எனப் பூசாவிதிகள் உரைக்கின்றமையின், “நின்றாட்பூசை யுள்ளாரெனில் எங்கே உலகர் பூசைகொள்வார்“ என வுரைக்கின்றார். உலகர் என்றது, மண்ணுலகத்து மக்களை, விண்ணுலகம் போக பூமி என்றும், மண்ணுலகம் கன்ம பூமி யென்றும் புராணிகர் உரைத்தலால், பூசை முதலிய கன்மம் செய்தற்குரியவர் இவ்வுலகவரே யென அறிக. மாசு - குற்றம்.
இதனால், வடிவுடை மாணிக்கம் என்ற அம்பிகையின் திருவடிக்கண் பூசை செய்யாதவர், எத்தகைய தேவராயினும் உலகவர் செய்யும் பூசையை ஏற்றற் குரியராகார் என்பதாம். (42)
|