1429. அடியார் தொழுநின் அடிப்பொடி
தான்சற் றணியப்பெற்ற
முடியால் அடிக்குப் பெருமைபெற்
றார்அம் முகுந்தன்சந்தக்
கடியார் மலர்அயன் முன்னோர்தென்
ஒற்றிக் கடவுட்செம்பால்
வடியாக் கருணைக் கடலே
வடிவுடை மாணிக்கமே.
உரை: இமயமலையிற் பிறந்த பாவை போன்றவளே, அருள் வளம் கொழிக்கும் திருவொற்றியூர்க்கண் உறையும் அழகிய கொடி போல்பவளே, வருக வருக என்று அழைக்கும் மெய்யன்பர்க்கு வாழ் முதலாகிய அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, அயன் முதலிய தேவர்களின் முடிகள் இடைவிடாது வீழ்ந்து வணங்குவதால் மாறி மாறிப் படுமாயின், ஆஆ அனிச்சமலரும் நிகராகாத பூப்போலும் நின் சிறிய திருவடிகள் பொறுக்குமோ? காத்தருள்க. எ.று.
அயன் முதலிய தேவர்கள் காலம் தோறும் இடையறவின்றி வந்து வணங்குமாறு தோன்ற, “அயன் முதலோர் ஓவாது வணங்குதலால்” என்றும், கோடிக்கணக்கில் வருதலால் தேவர்களின் கோடிக்கணக்கான முடிகள் ஒன்றோடொன்று மிக்குவந்து திருவடியைத் தீண்டும்படி வணங்குதல் தோன்ற “முடிகோடி உறழ்ந்து படில்” என்றும், திருவடி அனிச்சம் பூவினும் மெல்லிதாதலின் ஆற்றாது கன்றுமோ என்ற கவலை மீதூர்ந்து வியப்பு மேலிட்டு, “ஆஆ” என வாய்வெருவி, “அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங் கொலோ” என்றும் இயம்புகின்றார். திருவடிகள் ஆற்றாமையுற்றுக் கன்றிச் சிவப்புறாமற் காத்தல்வேண்டும் என்றற்குக் “காவாய்” என்று உரைக்கின்றார். “இமயப் பொற்பாவாய்” என்பது முதலியன ஆர்வம் பற்றி வந்தன, இதனை ஆர்வமொழியணி என்பர்.
இதன்கண், வடிவுடை மாணிக்கமே, இமயப் பொற்பாவையே, அன்பர் வாழ்வே, அயன் முதலோர் முடிகோடி உறழ்ந்து படில் சிற்றடி ஆற்றுங்கொலோ; ஆற்றாமல் வருந்தவிடாது காவாய் என்பதாம். (44)
|