143. பெருமை வேண்டிய பேதையிற் பேதையேன்
பெருந் துயருழக் கின்றேன்
ஒருமை யீயுநின் றிருப்பத மிறைஞ்சிலேன்
உய்வ தெப்படியேயோ
அருமையாம் தவத் தம்மையும் அப்பனும்
அளித்திடும் பெரு வாழ்வே
தரும வள்ளலே குணப் பெருங்குன்றமே
தணிகை மாமலை யானே.
உரை: தவ வகைகளில் அரிய தவத்தின் பயனுருவாகிய உமையம்மையும் சிவபெருமானும் அருளிய பெருவாழ்வாகிய முருகப் பெருமானே, தருமத்தி னுருவாகிய வள்ளலே, நற்குணமே யாகிய பெரிய மலையே, தணிகை யென்ற பெருமலையை யுடையவனே, உலகிற் பெருமை பெற விரும்பும் பேதை மக்களில் மிக்க பேதையாகிய யான் அது கருதிப் பெருந் துன்பத்திற் கிடந்து வருந்துகின்றேனே யன்றி ஒருமை நிலையாய வீட்டின்பம் நல்கும் நின் திருவடிகளை வழிபடா தொழிகின்றேன்; யான் உய்யும் வகை என்னவாம்? எ. று.
தவம் புரிந்தோர் வரலாறுகளைக் கூறும் புராணங்களில் பலவேறு திறத்தினர் பலவேறு பயன் கருதிப் பலவகைத் தவங்களைச் செய்திருப்பது தெரிகிற படியால், சிவபிரானது திருமேனியில் பாதியாகும் அரிய தவம் செய்து மேன்மையுற்ற பெருமாட்டியாதலால், உமையம்மையை “அருமையாம் தவத்து அம்மை” என்றும், முருகப் பெருமானை, அப்பனாய்ப் பெற்றதால் சிவபிரானும் உருவாக்கி வளர்த்ததால் உமையம்மையும் ஒப்ப அன்பு செய்து வளர்த்தமை பற்றி, “அம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே” என்றும் புகழ்கின்றார். தன்னைப் பரவுவார்க்குப் பெருவாழ்வளிக்கும் பெருந்தகையாதலால் “பெருவாழ்வே” என்று போற்றுகின்றார். தருமப் பயன்களைத் தடையின்றி வழங்குவோன் முருக னென்றற்குத் “தரும வள்ளல்” எனவும், தக்க பெருங் குணக் குன்றாய்த் திகழ்வது புலப்படக் “குணப் பெருங் குன்றமே” எனவும் போற்றுகின்றார். பேரறிவு கொண்டு அருஞ் செயல் புரிந்து சிறக்கும் மேதைகள் பெறக் கடவ பெருமையைப் பேதைகட் கெல்லாம் கீழ்ப்பட்ட பேதையாகிய யான் பெருமைக் குரிய செயலொன்றும் செய்யாமற் பெற்றுக் கொள்ள விழைந்து ஆகாதன செய்து அல்லற் படுகின்றேன் என்பாராய்ப் “பெருமை வேண்டிய பேதையிற் பேதையேன் பெருந்துயருழக்கின்றேன்” என்றும், ஒன்றாய்ப் பரமாகிய சிவத்தோடு ஒன்றி யுடனாகும் வீடு பேற்றை “ஒருமை” என்றும், அதனை நல்கும் முருகனுடைய இரண்டாகிய திருவடிகளை நினைந்து வழிபடா தொழிந்தமை, ஒருமைப் பேற்றுக்குத் தடையாவ துணர்ந்து வருந்துமாறு விளங்கத் “திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வது எப்படியோ” என்றும் இயம்புகின்றார்.
இதனால் முருகன் திருவடி வழிபாடு வீடு பேற்றுக்கு ஏதுவானது தெரிவித்து வழிபடாமைக்கு வருந்துமாறு காணலாம். (3)
|