1430.

     ஓவா தயன்முத லோர்முடி
          கோடி உறழ்ந்துபடில்
     ஆவா அனிச்சம் பொறாமலர்ச்
          சிற்றடி ஆற்றுங்கொலோ
     காவாய் இமையப்பொற் பாவாய்
          அருளொற்றிக் காமர்வல்லி
     வாவா எனும்அன்பர் வாழ்வே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      கட்டுதல் அமைந்த சடையை முடியிலேயுடைய ஒற்றியூர்ப் பெருமான் நெஞ்சின்கண் அமர்ந்துள்ள தேனொழுகும் மலர் அணிந்த குழலையுடைய மான்போன்ற அம்பிகையாகிய வடிவுடை மாணிக்கமே, அன்பர்களின் நான்மறைக்கும் உபநிடதங்களுக்கும் ஆகமங்கட்கும் இப்பொழுதும் சிறிதும் எட்டாத நின்னுடைய அழகிய திருவடி மலர்கள் எளியேனுடைய தலைக்கு எட்டுமோ, அறியேன். எ.று.

     இட்டர் - இட்டார் என நீண்டது; இட்டர் - இஷ்டர் - அன்பர். வரலாற்று நெறியில் முதலில் வேதங்களும், பின்னர் உபநிடதங்களும் தோன்றின வென்பர்; ஆகமங்கள் அவ்வந்நாட்டு அறிஞர்களிடையே வேதங்கட்கு முன்னிருந்தோ உடனாகவோ நிலவியன. அவை வட மொழியில் எழுதப்பட்டது, வேதோப நிடதங்கட்குப் பின்னேயாம். ஆகமம் என்ற வடசொல், வேறு மொழிகளிலிருந்து வந்தது என்று பொருள் தருவது. அதனால் அவை சொல் புதிய, பொருள் பழைய எனப்படுகிறது. வேதக் காட்சிக்கும் உபநிடத வுச்சிக்கும் அப்பாற் பட்டவை அம்பிகையின் திருவடி என்றற்கு, “மறைக்கும் உபநிடதத்திற்கும் இன்னும் சற்றும் எட்டா நின் பொன்னடி” என்று கூறுகின்றார். வேதங்களின் ஆராய்ச்சியும், உபநிடதங்களின் உரை நுணுக்கமும், ஆகமங்களின் தெளிவுரையும் மிகவும் விளங்கியுள்ள இந்நாளிலும் சிறிதும் காணப்படாமை பற்றி “இன்னும் சற்றும் எட்டா நின் பொன்னடி” என்றும், இல்பொருளாகாது உள்பொருளாய் நுண்ணறிவின் எல்லைக்கண் ஒளிர்தலின், “பொன்னடிப் போது” என்றும் கூறுகின்றார். இத்துணை அருமையும் பெருமையும் வாய்ந்த நின் திருவடி எளியேன் கண்டு தலையால் வணங்கியின்புற வாய்க்குமோ என வேண்டுகின்றாராதலால், “எளியேன் தலைக்கு எட்டுங் கொலோ” என்று ஏங்கி மொழிகின்றார். விரிந்து நாற்றிசையும் பரவாதபடி கட்டப்படுதல் பற்றிக் “கட்டார் சடை” என்கின்றார். பின்னியது போல அழகுறக் கட்டிய சடைக் கோலம் பின்னகமாய்ப் பின் பிஞ்ஞகமென வழங்குவதாயிற்று, அன்னை அஞ்ஞை யாயினது போல. அதனால் சிவனுக்குப் பிஞ்ஞகன் என்றொரு பெயருமுண்டாகியுளது. சிவனது நினைவின்கண் தோன்றி இன்பம் செய்வதுணர்ந்து “எம்மான் நெஞ்சகத் தமர்ந்த மடமானே” எனப் புகழ்கின்றார். மட்டு - தேன். மடமான் - இளமான். யானை போல்வானை யானை யென்றல் போல, மான்போன்றாளை மான் என்பர்.

     இதனால், வேதம், உபநிடதம், சிவாகமம் ஆகியவற்றின் அறிவாராய்ச்சிக்கு இன்று காறும் சிறிதும் எட்டாநிலையில் இருக்கும் அம்பிகையின் திருவடி எளியேன் தலையிற் படுமளவு வாய்க்குமோ என உரைத்தவாறாம்.

     (45)