1432.

     வெளியாய் வெளிக்குள் வெறுவெளி
          யாய்ச்சிவ மேநிறைந்த
     ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம்
          பரைநினை ஒப்பவரார்
     எளியார்க் கெளியர் திருவொற்றி
          யார்மெய் இனிதுபரி
     மளியாநின் றோங்கு மருவே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, உன்பால் உளதாகும் ஞான மணத்தை நயந்து உன்னைக் காதலித்தது அறியாதார், விண்ணக வாழ்வைக் காதலித்து அதனைப் பெறல் வேண்டி நின்பால் மெய்யன்பு செலுத்துவோரது உண்மையன்பிற்கும் நின் புலவிக்கும் அன்றி வணங்காத முடியினனாகிய எங்கள் பெருமானும், திருவொற்றியூரில் வாழ்பவனுமாகிய சிவபெருமான், உன் குணநலத்தை விரும்பியே தன் மெய்யைக் கூறு செய்து தந்தான் என்று கூறுகின்றார்கள். எ.று.

     விணம் - விண்ணுலகத்துப் போக வாழ்வு. அந்த வாழ்வும் சிவனருளாலன்றிப் பெறப்படாமை பற்றி, சிவத்தின்பால் மெய்யன்பு செலுத்துகின்றார் என்பது புலப்பட, “விணம் காதல் அன்பர்தம் அன்பு” என்றும், அன்பர்க்குப் பணி புரிவதையே அறமாகக் கொண்ட அண்ணலாதலின் அவர்தம் அன்பிற்கென விதந்தும் மொழிகின்றார். அம்பிகையின் புலவி தீர்த்தற்குத் திருவடி வணக்கமன்றி வாயில் வேறின்மை தோன்ற, “நின் புலவிக்கும் அன்றி வணங்காமுடி எங்கள் பிரான்” என இயம்புகின்றார். முடியினின்றும், நீக்கமன்றிக் கிடத்தலின் திங்களையும் உடன் கூட்டி “வணங்கா மதி முடி” என உரைக்கின்றார். வணங்காமுடி என இயைத்தல் வேண்டும். குணநலங்களிலும் உமையம்மை ஒப்புயர் வில்லாதவளாதலால், “குணம் காதலித்து மெய்க்கூறு தந்தார்” என்று கூறுகின்றார். குணநலத்தினும் மேனிக்கண் கமழும் சிவஞான மணம் சிறப்புமிக்க தென்பது புலப்பட, “உன்மணம் காதலித்த தறியார்” என்று இயம்புகின்றார். மெய்யன்பர் அன்புக்கு வணங்குவது ஒரு புறமிருக்க, அம்பிகையின் புலவி தீர்க்க வணங்குவது பெரிது என்க.

     இதனால், அம்பிகையின் புலவிக்கு வணங்கும் பரம சிவன், அப்பெருமாட்டியின் குணதலத்தினும் மேனி கமழும் சிவஞான நன்மணத்திற்கொண்ட காதல் சிறந்தது என உரைத்தவாறு.

     (47)