1433. விணங்காத லன்பர்தம் அன்பிற்கும்
நின்புல விக்கும்அன்றி
வணங்கா மதிமுடி எங்கள்
பிரான்ஒற்றி வாணனும்நின்
குணங்கா தலித்துமெய்க் கூறுதந்
தான்எனக் கூறுவர்உன்
மணங்கா தலித்த தறியார்
வடிவுடை மாணிக்கமே.
உரை: அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, பெரிய சுகானந்த வாழ்வு தருபவளே, சிவாகமங்களும் கந்தபுராணம் முதலியனவும் சொல்லுகின்ற பல்வேறு அண்டங்களெல்லாவற்றையும், அவ்வண்டப் பரப்புக்களில் நிறைந்து வாழும் சராசரங்கள் அனைத்தையும், நீ ஈன்று புறந்தரும் செயல்வகையை எண்ணியறிந்தும், இப்பொழுதும் உன்னை இளமை கெடாத கன்னிகை என்று அறிவுடையோர் சொல்வது என்னையோ? கூறியருள்க. எ.று.
பன்னும் என்றதனால் எழுவாயாகிய ஆகமபுராணங்கள் வருவிக்கப் பட்டன, பவுட்கர சங்கிதையில் அத்துவப் பிரகரணமும், கந்த புராணத்தில் அண்டகோசப்படலமும் ஈண்டு பொருளாக அமைகின்றன. இவற்றின் இயல்புகளைச் சிவஞான முனிவர் தமது சிவஞானபாடியத்து இரண்டாம் சூத்திரத்து மூன்றாமதிகரணத்தின்கண் உரைப்பது காண்க. ஒன்று போலின்றி வேறு வேறு இயல்பினவாதலால் “பல்வேறு அண்டம் எல்லாம்” என்றும், அண்டம் ஒவ்வொன்றின் பரப்பிலும் சரமும் அசரமுமாகிய உயிர்கள் வாழ்தல் தோன்ற “அண்டப் பரப்பினின்று துன்னும் சராசரம் யாவையும்” என்றும் குறிக்கின்றார். இவை யாவும் மாயையாகிய பரிக்கிரக சத்தியின் காரியமாகும்; அதனைக் காரியப்படுத்தி அண்டங்களைத் தோற்றுவிக்கும் அருட்சத்தி உமையாகும்; தன்பால் ஒடுங்கியிருக்கும் மாயையை அண்டங்களும் புவனங்களுமாய்க் காரியப் படுத்தும் அருட்சத்தி விகாரப்படுவதின்று; அவ்வருள் உமையாதலின் அதனை அறிந்தோர், “இளந்தை கழியாத கன்னிகை” என்றும், மாயை பரிக்கிரகசத்தியாய்த் திருவருட் சத்தியால் காரியப்படுவதுணர்ந்தவர்க்கு உண்மை தெளிவாதலின், “யாவையும் ஈன்றது சூழ்ந்தும்” என்று நயமாக உரையாடுகின்றார். இதனையே, சுத்த மாயையிற் காரியப்பட்ட சிவதத்துவங்களின் தோற்றமுறையில் வைத்து, “உலகுயிர் எல்லாம் ஈன்றும், பவன் பிரமசாரியாகும் பான்மொழி கன்னியாகும், தவம்தரு ஞானத்தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே” (சிவ. சித். சூ. உ. 77) என்று அருணந்தி சிவனார் உரைத்தருளுகின்றார். குழமை - குழந்தையானாற்போல, இளமை இளந்தையாயிற்றென்க. கன்னிமை என்பது வடமொழி மரபு. மன்னும் என்றவிடத்து, 'மன்' பெருமை குறித்தது. ஆனந்தத்தில் அறிவு மழுங்கும்; சுகத்தில் தெளிவுறும். ஆகவே, சுகானந்த வாழ்வில் ஞானத்தெளிவும் இன்பப் பெருக்கும் காணப்படும் என்க.
இதனால், வடிவுடை மாணிக்கமானவள் பல்வேறு அண்டங்களையும் அவற்றில் வாழும் சராசரங்களையும் பெற்றுப் புறந்தருகின்றாளாயினும் இளமை கழியாத கன்னியேயாவள் என வற்புறுத்தவாறு. (48)
|