1434. பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ்
அண்டப் பரப்பினின்று
துன்னும் சராசரம் யாவையும்
ஈன்றது சூழ்ந்தும்உன்னை
இன்னும் இளந்தை அழியாத
கன்னிகை என்பதென்னே
மன்னும் சுகாநந்த வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: இருவகைப் பற்றையும் கடந்த சான்றோர் நாளும் புகழும் திருவொற்றியூரில் வாழும் எங்கள் பெருமானாகிய சிவனது இடப்பாகத்தில் சேர்ந்திருக்கும் அமுதம் போன்றவளும், கானும் கடலும் கடந்த திருமால் புகழும் மான் போன்றவளுமாகிய வடிவுடை மாணிக்கமே, சினமாகிய குற்றத்தை யறுத்தொழித்த பெரியோர்கள் உள்ளமாகிய செந்தாமரையில் செழிப்புற்று, மற்றைக் கரணங்களான மனம் கடந்து, பேசும் வாய் கடந்து விளங்கும் மறையாகிய அன்ன மாவாள். எ.று.
சினம் - கோபம் முதலிய குற்றங்கள். “குற்றமறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடுவார் தமக்கன்பு செய்வார்” (ஆவூர்ப்) என ஞானசம்பந்தர் ஓதுதலின், “சினம் கடந்தோர் உள்ளச் செந்தாமரையில் செழித்து” என ஓதுகின்றார். குற்றமறுத்தவுடன் குணம் பரவுதல் உடனிகழ்ச்சியாதலால் சினமற்றவர் உள்ளத்திருக்கும் சிறப்பை எடுத்துரைக்கின்றார். செழித்தல், ஈண்டு மிக்க உவகையுடன் இருத்தல்மேற்று. அன்னம் தாமரை மலரில் இருத்தல்போல மறையன்னம் சினம் கடந்தோர் உள்ளத் தாமரையில் செழித்து ஓங்குதல் கூறுகின்றார். மறைகளின் தெளி பொருளாய சிவஞானம் உணர்வும் உரையும் கடந்த உயர்ஞானமாதலால், அந்த ஞானவடிவினளான அம்பிகையை, “மனம் கடந்து ஓதும் அவ்வாக்கும் கடந்த மறையன்னமே” என்று உரைக்கின்றார். 'கடந்தோர் தினம் புகழ் ஒற்றி' என இயைக்க. கடந்தவர் - யான் எனதென்ற இரு வகைப்பற்றையும் அற்றவர்; ஈண்டுத் துறவின் எல்லையைக் கடந்தவரான பட்டினத்தடிகளைக் குறிப்பதாகக் கொள்ளினும் அமையும். “பார் அனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல், ஆரும் துறக்கை அரிதரிது” எனத் தாயுமானவர் கூறுவது காண்க.
இதனால், வடிவுடை மாணிக்கம் உள்ளச் செந்தாமரையில் செழித்து வாக்கு மனம் கடந்து விளங்கும் மறையன்னமாவள் என்பதாம். (49)
|