1435.

     சினங்கடந் தோர்உள்ளச் செந்தா
          மரையில் செழித்துமற்றை
     மனங்கடந் தோதும்அவ் வாக்கும்
          கடந்த மறைஅன்னமே
     தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம்
          மானிடம் சேரமுதே
     வனங்கடந் தோன்புகழ் மானே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

     வளம் பொருந்திய வயல்களையுடைய ஒற்றியூர் உறையும் நல்ல அம்பிகையான வடிவுடை மாணிக்கமே, வல்லவரும் வல்லமையில்லாதவரும், வேறு மனிதர் முதலிய எல்லாரும் நின் அருட்செயலாலன்றி ஓர் அணுவும் இயக்குவதிலர் என்பர்; அற்றாயின், வறுமையால் வருந்துகிற கடையனாகிய யான் செய்யும் குற்றங்கட் கேது அவ்வறுமையே யாம். எ.று.

     மல்லல் - வளம், வல்லவரும் மாட்டாதவரும் தேவருள்ளும் உண்டெனப் புராணங்கள் கூறுதலால், அவர்களை வேறுவைத்துக் கூறுகின்றார். மண்ணுலகில் மக்கள் மேம்பட்டுறைதலின் அவர்களை எடுத்து “மனிதர் முதல் எல்லாரும்” என்கின்றார். எத்திறத்து எல்லார்க்கும் திருவருள் இயக்கமில்லையாயின் இயக்கமில்லை; இயக்குவிக்கும் திறமும் இல்லை. “அவனன்றி ஓர் அணுவும் அசையாது” என்ற பழமொழியும் அதனால் உண்டாயது. இதனை எண்ணியே, “எல்லாரும் நின் செயல் அல்லாது அணுவும் இயக்கிலரேல்” என வடலூர் வள்ளல் வரைந்து கூறுகின்றார். காண வேண்டிய தொன்றின்பால் கட்பார்வையைச் செலுத்தினாலன்றிக் கண் காணாது. காணுமிடத்தும் கண் காணும் நலமுடையதாகல் வேண்டும். காணும் நலமுடைய கண்களைத் தான் பார்வையைச் செலுத்திப் பொருளைக் காணச் செய்கிறது உயிரறிவு. கண்ணிடத்தில் காணும் நலமில்வழி உயிரறிவு இருந்தும் காட்சி நடைபெறல் இல்லை. கண்ணைக் காணச் செய்வதும், காதைக் கேட்கச் செய்வதும், மனத்தை நினைக்கச் செய்வதும், காலை நடக்கச் செய்வதும், அணுவை அசையச் செய்வதும் திருவருள்; அணுவின்பால் அசையும் திறம் அமைவது திருவருள்; நீரணு உறைந்தால் பனிக்கட்டி யாவதும், காய்ச்சினால் ஆவியாவதும் ஆகிய திறம் உடையதாயது திருவருட் செயல். பொருட்கு நிலையும் மாற்றமும் திரிவும் திருவருட் பயன். திருவருளின்றேல், பொருள்கட்குத் தோற்றமும் நிலையும் கேடும் மறைவும் யாவும் திருவருளே யாதலால், அதனாலன்றி எவராலும் எவ்வாற்றாலும் எத்துணை நுண்ணிய அணுவையும் அசைக்க முடியாது என்பது உண்மை யுரையாயிற்று. பொருள் வேண்டி ஆங்காங்குச் சென்று ஒருவன் இரப்பதற்குக் காரணம் இல்லாமை; இல்லாமையுற்ற விடத்துக் கற்போல் அசைவின்றி யிராது பொருள்வேண்டி இரப்பது குற்றமாயினும், அதனைச் செய்தற்கு ஊக்குவது புல்லறிவு; புல்லனாகிய யான் குற்றம் புரிகின்றேனேயன்றி வேறில்லை என்பாராய், “இல்லாமையால் உழல் புல்லேன் செய்குற்றங்கள் ஏது கண்டாய்” என்று இயம்புகின்றார். புல்லறிவு குற்றத்துக் கேதுவாதல் போல, நல்லறிவு குணங்கட் கேதுவாம்; அதனை அருளுக; நினது அருளுண்டாயின், நலமே பெருகி விளையும் என்பது.

      இதனால், வல்லார் மாட்டாராகிய எல்லாரும் நின் செயலின்றி அணுவும் அசைக்கிலர்; அதனை நினையாமல் இல்லாமையால் உழல் புல்லர்செய் குற்றங்கட்கு ஏது அவ்வில்லாமை என்பதாம்.

     (50)