1436.

     வல்லாரும் வல்லவர் அல்லாரும்
          மற்றை மனிதர்முதல்
     எல்லாரும் நின்செயல் அல்லா
          தணுவும் இயக்கிலரேல்
     இல்லாமை யால்உழல் புல்லேன்செய்
          குற்றங்கள் ஏதுகண்டாய்
     மல்லார் வயல்ஒற்றி நல்லாய்
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      அம்பிகையான வடிவுடை மாணிக்கம், ஓவியத்தெழுதப் படாத அழகிய உயிர்ப்புடைய சித்திரமாயும், இனிய இசையின் இன்பப் பயனாயும் உள்ளவள்; கையால் தொழுது மகிழ்ச்சியாற் கூத்தாடும் அன்பர்களின் உள்ளத்து நிலவும் களிப்பாயும், ஞானத்தால் உணர்ந்து பெறும் இன்பக்கடலாயும் உள்ளவள்; செழித்த நீண்ட பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூர்ப் பெருமானுடைய சிறந்த துணைவியாய், குற்றப்படாத மறையுணர்த்தும் முடிபொருளாய் விளங்குபவள். எ.று.

     எழுதாச் சித்திரம் என இயையும். காண்பார்க்கு எழுச்சி நல்கும் உயிரோவியம் என்றற்கு “உயிர்ச் சித்திரம்” என உரைக்கின்றார். இனிய இசையைக் கேட்டவழிப் பிறக்கும் இன்பப் பயன், இங்கே “இன்னிசைப் பயன்” எனக் கூறப்படுகிறது. கைகூப்பித் தொழுங்கால் உள்ளம் கிளர்ந்தெழுந்து இன்பத்தாற் பொங்குதலால், மகிழ்வை, “தொழுதாடும் அன்பர்தம் உட்களிப்பே” என்று உரைக்கின்றார். மாசற்ற வுள்ளத்துப் பெருகும் தூய அன்பு ஞானப் பேரின்பத்தை வழங்குதலால் “சிற்சுகக் கடலே” எனல் வேண்டப்படுகிறது. சிவபெருமான் எச்செயலையும் அம்பிகையின் துணையைக் கொண்டே செய்தலால், “ஒற்றி எம்மான் தன் திருத்துணையே” என்றும், மறைவழங்கும் சொல்லும் பொருளும் அவளேயாதலின் “வழுவாமறை இன் பொருள்” என்றும் இயம்புகின்றார். மறை முடிவாய் இன்ப வீடு காட்டுதலால் இங்ஙனம் இசைக்கின்றார் என்றுமாம்.

     இதனால், வடிவுடை மாணிக்கம், எழுதாவுயிர்ச் சித்திரம், இன்னிசையின் பயன், அன்பர்தம் உட்களிப்பு, சிற்சுகக் கடல், ஒற்றி யெம்மான் தன் திருத்துணை, மறையின் பொருள் என்று பரவியவாறாம்.

     (51)