1439.

     அயிலேந்தும் பிள்ளைநற் றாயே
          திருவொற்றி ஐயர்மலர்க்
     கயிலேந் தரும்பெறல் முத்தே
          இசையில் கனிந்தகுரல்
     குயிலே குயின்மென் குழற்பிடி
          யேமலைக் கோன்பயந்த
     மயிலே மதிமுக மானே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      வயல்களும் வளமனைகளும் மிக்குள்ள திருவொற்றியூர்க்கண் சிவபெருமான் மெய்ம்மை சான்ற மனத்தின்கண் நிறைந்து விளங்கும் நல்ல அன்பே, நின்பால் அன்புடையோர் கையகத்தே திகழும் கனி போன்றவளே, தனித்த உண்மைக் கதிக்குரிய நன்னெறியே, வையகத்தோரை வருத்தும் நோய்க்கு மருந்தாகிய, வடிவுடை மாணிக்கமென்ற அம்பிகையே! எ.று.

     செய் - வயல்; அகம் - மக்கள் குடியிருந்து வாழும் வள மனைகள்; செய்யகம்; உம்மைத்தொகை. சிவபெருமான் உண்மையின் உயர்வடிவமாதலின், அவர் உள்ளத்தன்பின் உண்மைத்தன்மை உயர்வுமிக்க தென்றற்குச் “சிவபெருமான் மெய்யகம் ஓங்கும் நல்லன்பு” என உரைக்கின்றார். தன்பால் அன்புடையோர்க்கு வேண்டும் உறுதிப்பயன்களை அங்கை நெல்லிக்கனிபோல அருளுமாறு விளங்க, “நின்பால் அன்பு மேவுகின்றோர் வையக மோங்கும் கனியே” என்று கூறுகின்றார். தனித் துயர்ந்த சிவகதிக்குரிய சன்மார்க்க மருள்பவள் என்பதுபற்றி, “தனி மெய்க்கதி நெறியே” என்று இசைக்கின்றார். நோயும் மருந்தும் இடம் பெறுவது வையகத்தன்றி மேலுலகத்தின்மை நோக்கி, “வையகம் ஓங்கும் மருந்தே” எனக் கூறுகின்றார்.

           இதனால், வடிவுடை மாணிக்கம், திருவொற்றியூர்ச் சிவபெருமான் அகத்தோங்கும் நல்லன்பு, அன்பர் கையக மோங்கும் கனி, தனி மெய்க்கதி, நெறி, மருந்து எனப் புகழ்ந்தவாறு காணலாம்.

     (54)