144. மலையும் வேற்கணார் மையலி லழுந்தியே
வள்ளனின் பதம் போற்றா
தலையுமிப் பெருங் குறையினை யையகோ
யாவரோ டுரை செய்கேன்
நிலைகொ ளானந்த நிருத்தனுக் கொருபொருள்
நிகழ்த்திய பெருவாழ்வே
தலைமை மேவிய சற்குரு நாதனே
தணிகையம் பதியானே.
உரை: நிலைத்த பேரின்பக் கூத்தப் பெருமானுக்கு ஓர் உறுதிப் பொருளையளித்து உயிர்கட்கு உயர் வாழ்வளிக்கும் முதல்வனே, உண்மைப் பொருளை யுரைக்கும் குருநாதனே, தணிகைப் பதியில் எழுந்தருள்பவனே, சென்று தாக்கும் வேல் போன்ற கண்களையுடைய மங்கையர் கூட்டத்திற் பிறக்கும் மயக்கத்தில் மூழ்கித் திருவருள் வள்ளலாகிய உன்னுடைய திருவடியை நினைந்து பரவுதலைச் செய்யாமல் ஆசை வழியோடி யலையும் இந்தப் பெருங் குறையை யாருக்கு எடுத்துச் சொல்லுவேன்? எ. று.
சிவபிரானுடைய திருக்கூத்து என்றும் ஒழிவின்றி நிகழும் இயல்பினதாதலால், “நிலைகொள் ஆனந்த நிருத்தன்” என்று கூறுகின்றார். என்றும் எவ்வுயிர்க்கும் இன்பம் நல்குவது பற்றித் திருக்கூத்தை “ஆனந்த நிருத்தம்” எனச் சிறப்பிக்கின்றார். “மாயை தனை யுதறி வல்வினையைச் சுட்டுமலம், சாயவமுக்கி யருள் தானெடுத்து - நேயத்தால், ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல், தான் எந்தையார் பரதம் தான்” (உண். விளக்) என்று திருவதிகை மனவாசகங் கடந்தார் கூறுவது காண்க. பொருள் என்றது பிரமனைக் குட்டிச் சிறை யிடுதற்குக் காரணமாயிருந்த பொருள். சற்குரு-மெய்யுணர்வு நல்கும் ஞானசிரியன். காணப்படுவார் உள்ளத்திற் பாய்ந்து காமநோயைச் செய்தலின் “மலையும் வேற்கணார்” என்று குறிக்கின்றார். மகளிர் கூட்டத்துப் பிறக்கும் மயக்கம் உண்மை யறிவை மறைத்தலால் முருகன் திருவடி பரவும் நினைவு இன்றி உலகியலில் அழுந்தித் துன்புறுகிறேன் என்பார், “வள்ளல் நின் பதம் போற்றாதலையும் இப்பெருங் குறை” என வுரைக்கின்றார். இக்குறையால் உலக வாழ்வில் துன்பங்கள் பல தொடர்ந்து வருத்துகின்றன; இதனைப் பிறர்க்குக் கூறின் கேட்பவர் பலரும் என்னை இகழ்ந்து புறக்கணிப்பர்; நெஞ்சில் மிக்கதனை வாய்விட் டுரைத்தாலன்றி ஆறுதல் உண்டாகாது என்பதனால் என் குறையை யாவரிடத்து உரைப்பேன் என்பாராய், “ஐயகோ யாவரோ டுரை செய்கேன்” என்று வருந்துகிறார்.
இதனால் வழிபடாக் குறையை நினைந்து வருந்துமாறு கூறுவதாம் (4)
|