1440. செய்யகம் ஓங்கும் திருவொற்றி
யூரில் சிவபெருமான்
மெய்யகம் ஓங்குநல் அன்பேநின்
பால்அன்பு மேவுகின்றோர்
கையகம் ஓங்கும் கனியே
தனிமெய்க் கதிநெறியே
வையகம் ஓங்கு மருந்தே
வடிவுடை மாணிக்கமே.
உரை: வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை, பேரருள் வழங்கும் திருவொற்றியூரில் உள்ள பெருமானது இடப்பால் அமர்ந்த பசுமையான கரும்பு போல்பவள்; இனிய கற்கண்டை நிகர்ப்பவள்; சுவை பொருந்திய கனியிடத்துச் சுரக்கும் தேன்போன்றவள்; இரும்பு போன்ற வன்மை பொருந்திய மணமுடையவர்பால் மனம் இசையாத இளமை மிக்க கிளி போன்றவள், மேன்மேற் பெருகி வரும் ஒளிபொருந்திய சிவந்த சுடராய் விளங்குபவள். எ.று.
தன்னை நினைந்து அடைந்து வேண்டுபவர்கட்கு நிறைந்த அருள் வழங்கும் இயல்புபற்றித் திருவொற்றியூர்ப் பெருமானை, “பேரருள் தரும் ஒற்றியூர் உடையான்” என்று பரவுகின்றார். நிலத்தாற் பசுமையும் சுவையால் முற்றிய கரும்பையும் ஒத்து இயல்வது விளங்கப் “பசுங்கரும்பே” என்று புகழ்கின்றார். கற்போல் உரம்பெறினும் சுவை மிகுதியில் நிகரற்ற நலம் உடைமையின் கற்கண்டென்றும், மதுரம் மிக்க கனியிடத்துக் கனிந்தொழுகும் சாறுபோலும் அருள் சொரிதலுடைமைபற்றி “மதுரக்கனி நறவே” என்றும் பாராட்டுகின்றார். அன்பு செய்வார் எவரிடத்தும் இசைந்திருந்து இன்புறுத்தும் இளங்கிளியனையவளாயினும், இரும்புபோன்ற வன்மனமுடையவரிடத்து அன்பு கொள்ளாது விலகும் இயல்புடைமை கண்டு, “இரும் பேய் மனத்தினர்பால் இசையாத
இளங்கிளியே” எனப் போற்றுகின்றார். வரும் பேரொளி என்றது, மேன் மேலும் எழுந்து பெருகும் இள ஞாயிற்றின் பொன்னொளியைக் குறிக்கிறது எனினும். “செஞ்சுடர்” என்று சிறப்பித்தலால், இருள் முற்றும் அகற்றும் செவ்விய ஒளி திகழும் ஞாயிற்றொளியை என விளக்குதற்கு “வரும் பேரொளிச் செஞ்சுடர்” என விளக்குகின்றார்.
இதனால், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை, ஒற்றியூர் உடையானிடம் சார்ந்த பசுங்கரும்பும் கற்கண்டும் கனிநறவும் இளங்கிளியும் பேரொளிச் செஞ்சுடருமாய்ப் பிறங்குகின்றாள் என்றவாறாம். (55)
|