1444.

     ஏமமுய்ப் போர்எமக் கென்றே
          இளைக்கில் எடுக்கவைத்த
     சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ்
          ஞானத் திரவியமே
     தாமமைக் கார்மலர்க் கூந்தல்
          பிடிமென் தனிநடையாய்
     வாமநற் சீர்ஒற்றி மானே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      மன்னரில் மிக்க மலையரசன் மனைவியும், மலயத்துவச பாண்டியன் மனைவியுமான காஞ்சனமாலையும் நின் திருவாயால் அன்னாய் என அழைக்கப் பெற்றனர்; அவர்கள் அதற்குமுன் எத்துணையரிய தவம் செய்திருப்பர் கொலோ; சான்றோர்களால் உயர்வாகக் கருதப்படும் திருவொற்றியூரில் சூதாடு கருவி போன்ற இளைய முலையை யுடைய மின்னற் கொடிபோலும் வடிவுடை மாணிக்கமாகிய தாயே. எ.று.

     மலைமன்னர் பலருள்ளும் உயர்வும் பெருமையும் மிக்குடைமை பற்றி உமையம்மையைப் பெற்ற மலையரசனை “மன்னேர் மலையன்” எனவும், மலயத்துவச பாண்டியன் மனைவி பெயர் காஞ்சன மாலையாதல் பற்றி, “நற்காஞ்சனமாலை” எனவும் கூறுகின்றார். இருவரும் பெறாது பெற்ற பெருமகளாய அம்பிகையால் அம்மே என அழைக்கப்பட்ட பெருநலத்தை உலகம் வியப்ப உடையரானமை பற்றி, “அன்னே எனத் திருவாயால் அழைக்கப் பெற்றார்” என எடுத்துரைக்கின்றார். பல்லுலகுக்கும் பல்லுயிர்க்கும் அன்னையாயிருக்கும் அம்பிகை, தன்னைப் பெற்ற தாயரென மதித்து அம்மே என அழைத்தற்கு அவர்கள் எத்துணையோ அரிய பல தவம் செய்திருக்க வேண்டுமென்பது நினைந்து, “முன்னே யருந்தவம் என்னே முயன்றனர்” என மொழிகின்றார். வல் - சூதாடு கருவி.

      இதன்கண், மலையரசன் மனைவியும் மலயத்துவசன் மனைவியும் அம்பிகையை மகளாய்க் கொண்டு வளர்த்ததுடன், தம்மை அம்மே என வாய்திறந்து அன்புடன் அழைக்கப் பெற்ற பெருமையைப் பாராட்டியவாறு பெற்றாம்.

     (59)