1446. கணமொன்றி லேனும்என் உள்ளக்
கவலைக் கடல்கடந்தே
குணமொன்றி லேன்எது செய்கேன்நின்
உள்ளக் குறிப்பறியேன்
பணமொன்று பாம்பணி ஒற்றிஎம்
மானிடப் பாலில்தெய்வ
மணமொன்று பச்சைக் கொடியே
வடிவுடை மாணிக்கமே.
உரை: செவ்விய திருமகள் தலையாய திருப்பணிகளைப் புரியுமாறு அருளிய நறுமணமே, மணம் கலந்த நறுமலரே, வடிவுடை மாணிக்கமென்ற அம்பிகையே, பிறவிக்குரிய வினைநோய் நீங்குமாறு என் நெஞ்சின்கண் மிக்கமகிழ்வுடன், திருவொற்றியூரில் கோயில் கொண்டருளும் குருநாதனாகிய நின் கணவனாகிய சிவபெருமானும், நீயும், இன்பமாகக் கலந்திருக்கும் சிவானந்தத் திருக்காட்சியைத் தந்தருள்க. எ.று.
பிறவிக்குக் காரணமாகிய நோய்களைச் செய்யும் வினையைக் “கருவேதனை” எனக் குறிக்கிறார். இக் கருவேதனை முற்றவும் நீங்க வேண்டுமாயின் அதனையுடைய ஆன்மாவின் நெஞ்சம் சிவமும் சக்தியும் கூடிய சதாசிவத்தின் தனிநிலையமாதல் வேண்டும் என்றற்கு, என் நெஞ்சகத்தில் களிப்பொடு உன் கணவனும் நீயும் குலவுதல் வேண்டுமென முறையிடுகின்றார். உங்களிருவர்க்குமிடையே புலவியோ, ஊடலோ இருத்தலாகாது என்றற்கு, களிப்பொடு குலவும் அவ்வின்பநிலை வேண்டும் என்கின்றார். சத்தியும், சிவனும் கலந்து மகிழ்ந்திருக்கும் சிவபோக நிலையைச் சிவஞானச் செல்வம் எனும் கருத்தில் “குலவும் அந்தத்திரு” என்றும், அதனைக் குறைவின்றி அருளவேண்டும் என்பதற்காக நின் கணவனும் நீயும் குலவும் அந்தத் திருவே அருள் எனவும் விண்ணப்பிக்கின்றார்.
ஒற்றிப் பதியில் ஞானகுருவாயிருந்து அருள் புரிகின்றாராதலால் “ஒற்றிக் குருவே எனும் நின் கணவன்” என்று சிறப்பிக்கின்றார். குரு நாதனாய் விளங்குகின்றான் எனும் கருத்து, திருவொற்றியூரில் சிவனை எழுத்தறியும் (அறிவிக்கும்) பெருமானென்றும், வியாகரண தானப் பெருமான் எனவும் வழங்குவதனால் விளக்கமாகிறது. செந்தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் திருமகளைச் “செந்திரு” எனச் சிறப்பிக்கின்றார். திருமகள் கலைமகள் முதலிய தெய்வமகளிர் பணிசெய்யத் தன் குழலில் சிவஞான மணங்கமழ வீற்றிருக்கும் வடிவுடை அம்பிகையை “மருவே, மருவு மலரே, வடிவுடை மாணிக்கமே” எனப் பாராட்டுகின்றார்.
இதன்கண், திருமகள், கலைமகள் முதலிய தெய்வ மகளிர் பணி செய்ய அவர்கட்குச் சிவஞான மணம் அருளும் திருவொற்றியூர் வடிவாம்பிகையைத் தன் நெஞ்சத்தின்கண் சிவனொடு கூடிக் குலவ எழுந்தருள வேண்டும், அதனால் தமக்குக் கருவேதனை கெடும் என்று வடலூர் வள்ளல் தெரிவிக்கின்றார். (61)
|