1448. எண்ணிய எண்ணங்கள் எல்லாம்
பலிக்க எனக்குள்அருள்
பண்ணிய உள்ளங்கொள் உள்ளும்
புறம்பும் பரிமளிக்கும்
புண்ணிய மல்லிகைப் போதே
எழில்ஒற்றிப் பூரணர்பால்
மண்ணிய பச்சை மணியே
வடிவுடை மாணிக்கமே.
உரை: ஒற்றி நகர்க்கண் கோயில் கொண்டு பூக்களல் அழகு செய்யப்பட்ட தாழ்ந்த கூந்தலையுடைய மான் போன்ற வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, நின் திருமுன் இருந்து குற்றம் செய்தாலும், உன்னுடைய அன்பர்களாகிய திருத்தொண்டர் முன்னே செருக்குடன் நின்று வாது பல செய்தாலும், உன்னுடைய திருவடியை மறந்தாலும், நல்லறிவில்லாத எளியேன் எத்தகைய குற்றம் செய்தாலும் பொறுத்தருள வேண்டும். எ.று.
நிறையப் பூக்களால் மாலை தொடுத்துக் கூந்தலில் சூடி அழகுசெய்து கொள்வது மகளிர் இயல்பாதலின் “பூமாது செய் தாழ்குழல் மானே” என்று சிறப்பிக்கின்றார். நீண்டு தாழ்ந்த குழல் என்றற்கு 'தாழ்குழல்' எனக் கூறுகின்றார். மான் போல்வது பற்றி “மானே” என்கின்றார். நின்னுடைய திருமுன்னர் குற்றம்செய்தல் கூடாதாயினும், அறியாமையாலோ மயக்கத்தாலோ நன்றல்லது செய்வேனாயினும் அதைப் பொறுத்தருளல் வேண்டும் என்று வேண்டுவாராய் “தீது செய்தாலும்” என்று விண்ணப்பிக்கின்றார். நின்னுடைய திருமுன்பைக் காட்டிலும், நின்னுடைய அன்பர் திருமுன்பு ஞானமே நிலவும் நல்லிடமாதலின், அவ்விடத்தே நின் அன்பர் திருமுன்னர் நின்று செருக்குதலும் செருக்கி நின்று ஒருவரை ஒருவர் மறுத்து வாது புரிந்து மனநோய் விளைத்தலும் கூடாது என்பதற்காக, “நின் அன்பர்கள் தம்முள் செருக்கி நின்று வாது செய்தாலும்” என உரைக்கின்றார். செருக்குதல் கடியத்தக்க அறுவகைக் குற்றத்துள் ஒன்றாதலின், தனித்து எடுத்துக் கூறப்பட்டது. தீது செய்தலும் வாது செய்தலும் செருக்குதலும் பிறவும் அம்பிகையின் திருவடியை மறந்தவழி உளவாம் குற்றமாதலின், மறத்தலின் ஊங்கில்லை கேடு என்பதுபற்றி “நின் தாழ் மறந்தாலும்” என்றும், மறத்தலும் தவறு செய்தலும் தெளிந்த அறிவில்லாமை காரணமாக உண்டாதலும் அறிவின் கண் தெளிவின்மை முக்குண வயத்தால் அமைதலும் நிகழ்வதுபற்றி “மதியிலியேன் ஏது செய்தாலும் பொறுத்தருள்வாய்” என்றும் முறையிடுகின்றார்.
இதன்கண், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையை நோக்கி நின் திருமுன்னரும் நின் அன்பர்கள் திருமுன்பும் தீதுசெய்தல் செருக்குதல் செருக்கி நின்று வாது செய்தல் திருவடி மறத்தல் முதலிய குற்றங்களில் எதனைச் செய்தாலும் மயக்கம் காரணமாக வரும் மதியின்மை என்று கருதி அருள்கூர்ந்து பொறுத்தருள வேண்டும் என்று வேண்டியவாறு காணலாம். (63)
|