145.

    பதியு மப்பனு மன்னையும் குருவுநற்
        பயன்தரு பொருளாய
    கதியு நின் திருக்கழலடி யல்லது
        கண்டில னெளியேனே
    விதியு மாலு நின் றேத்திடும் தெய்வமே
        விண்ணவர் பெருமானே
    வதியும் சின்மய வடிவமே தணிகைமா
        மலையமர்ந் திடுவாழ்வே.

உரை:

     பிரமனும் திருமாலும் நின்று தொழும் தெய்வமே, தேவர்கட்குப் பெருமானே, ஞானத்தின் திருவுருவமே, தணிகை மலையில் எழுந்தருளும் வாழ் முதலே, தெய்வமும் தந்தையும் தாயும் குருவுமாய் விளங்கிப் பயன் தரும் உறுதிப் பொருளாகிய சிவகதி யளிக்கும் நின்னுடைய திருவடி யன்றித் துணையாவது வேறொன்றும் எளியனாகிய யான் காண்கிறேனில்லை, எ. று.

     படைத்தல் தொழிலைச் செய்வது பற்றிப் பிரமனை விதி யென்கின்றார்; படைப்புக் காலத்தேயே பிறப்புக்கும் இறப்புக்கும் கால வரையறை செய்வது பற்றி அவனுக்கு விதி யென்பது பெயராயிற் றென்பது முண்டு. திருமாலும் பிரமனும் தொழுது வரம் பெறுவது பற்றி “விதியும் மாலும் நின்று ஏத்திடும் தெய்வமே” என்று புகழ்கின்றார். அசுரர் செய்யும் கொடுமையினின்றும் காத்தளித்தலால், “விண்ணவர் பெருமான்” எனக் குறிக்கின்றார். ஞானமே யுருவாகிய நாயகனாதலால் “சின்மய வடிவமே” என்று கூறுகின்றார். வதிதல் - தங்குதல். பதி தெய்வம். நற்பயன் - முத்தி நலம். சிவகதி உறுதிப் பொருளாதல் பற்றி “நற்பயன் தரு பொருளாய கதி” என்று சிறப்பிக்கின்றார். பிறப்பறுக்க முயல்வார்க்குச் சிறப்பாக வேண்டிய சிவஞானம் திருவடி ஞானமாவது கொண்டு, “நின் திருக் கழலடி யல்லது கண்டிலன்” என்று இயம்புகின்றார்.

     இதனால் வீடு பெற முயல்வார்க்கு முருகன் திருவடி யல்லது துணை வேறில்லை என்பதாம்.

     (5)