1451. என்போல் குணத்தில் இழிந்தவர்
இல்லைஎப் போதும்எங்கும்
நின்போல் அருளில் சிறந்தவர்
இல்லைஇந் நீர்மையினால்
பொன்போலும் நின்னருள் அன்னே
எனக்கும் புரிதிகண்டாய்
மன்போல் உயர்ஒற்றி வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: சொற்பொருள் தெளியும் புலவர்கள் புகழ்கின்ற ஒற்றியூர்க்கண் எழுந்தருளும், நின் துணைவராகிய சிவபெருமானுடைய செம்மை சான்ற தோள்களைச் சேரும், மான் போன்ற வடிவுடை மாணிக்கம் என்ற அம்பிகையே, மிகச்சிறிது என்றாலும் என் நெஞ்சின் கண்ணுள்ள துயரம் நீங்கவும் நின்னுடைய அழகிய தேன்பொருந்திய பூப்போன்ற பாதத்தை துதிக்கவும் திருவுள்ளம் செய்தருளுக. எ.று.
சற்று, சிறிது எனும் பொருள்பட வரும் இடைச்சொல். நெஞ்சத் துயரம், நெஞ்சின்கண் தோன்றி வருத்தும் துன்பம். நினைவிலும் சொல்லிலும் செயலிலும் பிழையும் வழுவும் தோன்றுதற்கு நெஞ்சின்கண் உளவாகும் துயரம் காரணமாதலின் அது எத்துணை சிறிதாகினும் போக்கற்பாலது என்றற்கு, “சற்றே எனினும் நெஞ்சத் துயரம் தவிரவும்” என்று முறையிடுகின்றார். துன்பங்களைத் துடைத்தற்கே அன்றி வாராமல் பாதுகாத்தற்கு செய்யத் தகுவதான அம்பிகையின் திருவடியைப் போற்றுதலும், அம்பிகையின் திருவருளாலே நடைபெற வேண்டிய தொன்றாதலின், அது நினைந்து “தேமலர்ப் பதம் போற்றவும் திருவுள்ளம் புரிதி” என்று வடலூரடிகள் வேண்டுகின்றார். கண்டாய் - முன்னிலை அசை. சொல்லும் பொருளும் தனித்தனிச் சிறப்புச் சொற்களைத் தேர்ந்து தொடுத்துப் பாடுவது செஞ்சொற் புலவர்தம் சீரிய பண்பு ஆதலின், அவர்களைச் “சொல் தேர் அறிஞர்” என்று சிறப்பிக்கின்றார். இத்தகைய அறிவு சான்ற புலவர் பெருமக்கள் பாமாலை தொடுத்துப் புகழும் பண்பு மேம்பட்டிருப்பது தோன்ற “சொல்தேர் அறிஞர் புகழ் ஒற்றியூர்” என்று புகழ்கின்றார். வடிவுடை அம்பிகையின் திருக்கணவராதலின் 'துணைவர்' என்றும், அப்பெருமானுடைய தோளைச் சேர்ந்து பெறும் இன்பத்திற்கு உரியவளாதலின் அவ்வுரிமை தோன்ற “செம்மல் புயத்தணை மானே” என்றும் சிறப்புற மொழிகின்றார்.
இதன்கண், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையைச் சிவனுடைய திருத்தோளைச் சேர்ந்து இன்புறும் தனி உரிமை உடையவள் எனப் புகழ்ந்தோதி, தமது நெஞ்சத்தின்கண் நிகழும் துன்பம் சிறிதாயினும் போக்குதற்கும், அப் பெருமாட்டியின் திருவடியைப் போற்றுதற்கும் அவளது திருவருள் இன்றியமையாதது என வற்புறுத்தி வேண்டுகின்றார். (66)
|